ஜோதிபாசு நினைவுக் கூட்டம்- திரினமூல் காங். புறக்கணிப்பு
கொல்கத்தா: மறைந்த முதுபெரும் தலைவர் ஜோதிபாசுவின் நினைவுக் கூட்டத்தை புறக்கணிப்பதாக திரினமூல் காங்கிரஸ் கூறியுள்ளது. தங்களது கட்சித் தலைவர்கள் யாரும் இதில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
ஜோதிபாசு மறைந்தபோது அவருக்கு அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த தலைவர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகள் பாகுபாடு பார்க்காமல் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
பிரதமர் மன்மோகன் சிங்கும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். கட்சி பாகுபாடற்ற ஒரு தலைவராகவே அனைவராலும் பார்க்கப்பட்டார் ஜோதிபாசு.
ஆனால் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திரினமூல் காங்கிரஸ் கட்சியோ பாசுவை புறக்கணித்து விட்டது. அக்கட்சியின் தலைவர் மமதா பானர்ஜி மூத்த தலைவர் என்ற மரியாதைக்காகக் கூட நேரில் வந்து பாசு உடலுக்கு அஞ்சலி செலுத்தவில்லை. இறுதி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை.
இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக விமர்சித்திருந்தது. மேற்கு வங்க மக்கள் மமதாவை மன்னிக்க மாட்டார்கள், ஒட்டுமொத்த மேற்கு வங்க மக்களையும் மமதா அவமதித்து விட்டார் என்று சீதாராம் எச்சூரி கூறியிருந்தார்.
இந்த நிலையில் இன்று கொல்கத்தாவில் ஜோதிபாசு நினைவாஞ்சலிக் கூட்டம் நடைபெறுகிறது. இதிலும் அனைத்துக் கட்சியினரும் பங்கேற்கவுள்ளனர். ஆனால் இந்தக் கூட்டத்திலும் தாங்கள் பங்கேற்கப் போவதில்லை என்று திரினமூல் காங்கிரஸ் கூறியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சி பொதுச் செயலாளர் பார்த்தா சாட்டர்ஜி கூறுகையில், எங்களுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர்ந்து பேசி வருகின்றனர். இந்த நிலையில் நாங்கள் எப்படிப் போக முடியும். எங்களது கட்சியைச் சேர்ந்த எந்தத் தலைவரும் இதில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications