அனுமதியின்றி குழந்தை காப்பகம் - 76 குழந்தைகள் மீட்பு

குமரி எல்லையான காரகோணம் பகுதியை சேர்ந்தவர் ஷாஜி. மத போதகரான இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன் குழித்துறை அடுத்த கல்லுக்கட்டி பகுதியில் ஒரு வாடகை வீட்டில் குழந்தை காப்பகம் நடத்தி வந்தார். அங்கு ஜெப கூட்டமும் நடந்தது. இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து காப்பகத்துக்கு சொந்தமாக கட்டிடம் கட்ட பாலவிலை அருகே நிலம் வாங்கினார். கடந்த 4 மாதத்திற்கு முன் புதிய கட்டிடத்தில் குழந்தை காப்பகம் செயல்பட தொடங்கியது.
மிஜோராம், மணிப்பூர், அசாம் மாநிலத்தை சேர்ந்த 76 குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர். இங்கு வெளிமாநில குழந்தைகள் எப்படி வந்தது என்ற சந்தேகம் பொது மக்களுக்கு ஏற்பட்டது.
இதுகுறித்து நடந்த விசாரணையில் அனுமதியின்றி வெளி மாநில குழந்தைகளை வைத்து இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து நெல்லை சிறுவர் கூர்நோக்கு இல்ல அதிகாரி சகினாபானு நேற்று நள்ளிரவு களியாக்கவிளை போலீசாருடன் நடத்திய சோதனையில் அனுமதியின்றி காப்பகம் செயல்படுவது தெரிய வந்தது.
அங்கு இருந்த 76 குழந்தைகள் மீட்கப்பட்டன. ஷாஜியிடம் நடந்த விசாரணையில் பசியால் வாடிய வெளிமாநில குழந்தைகளை ஏஜெண்டுகள் மூலம் கொண்டு வந்ததாக தெரிவித்தார். இதையடுத்து காப்பகம் சீல் வைக்கப்பட்டது. மீட்கப்பட்ட குழந்தைகள் நெல்லை சிறுவர் கூர்நோக்கு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications