தமிழீழம் அமைய ஹாலந்து, ஜெர்மனி, சுவிஸ் கருத்துக் கணிப்பில் அபார ஆதரவு
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான கருத்துக்கணிப்பு நேற்று ஆலந்தில் 15 வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட வாக்களித்தவர்களில் 99.2 சதவீதம் பேர் சுதந்திரத் தமிழீழத் தனியரசை அமைப்பதே தமது விருப்பம் என தெரிவித்துள்ளனர்.
காலை 9 மணியிலிருந்து இரவு 8 மணிவரை இந்த வாக்கெடுப்பு நடந்தது. இதில் ஆலந்தில் வசிக்கும் தமிழீழ மக்களில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வாக்களித்தனர்.
இந்தக் கருத்துக் கணிப்புத் தேர்தலில் கண்காணிப்பாளர்களாக ஆலந்து அரசுத் தேர்தல் கண்காணிப்பாளர்கள், ஆலந்து மக்களும் கலந்து கொண்டனர்.
மொத்தம் பதிவான 2750 வாக்குகளில் தமிழீழத் தனியரசை ஆதரித்து 2728 வாக்குகளும், எதிர்த்து 9 வாக்குகளும் பதிவாகின. 13 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.
ஜெர்மனியில்...
இதேபோல ஜெர்மனியின் பல்வேறு நகரங்களிலும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதிலும் 99.2 சதவீதம் பேர் தமிழீழ அரசே தீர்வு என தெரிவித்தனர்.
மொத்தம் 23,089 வாக்குகள் பதிவாகின. இதில், 22,904 வாக்காளர்கள் தனித் தமிழீழ அரசினை நிறுவுவதற்கு ஆம் என்றும் 136 வாக்காளர்கள் இல்லை என்றும் 49 வாக்குகள் செல்லுபடியாகாத வாக்குகளாகவும் பதிவாகியுள்ளன.
சுவிட்சர்லாந்தில்..
இதேபோல சுவிட்சர்லாந்திலும் வாக்கெடுப்பு நடந்தது. இதில் கலந்து கொண்டு வாக்களித்தவர்களில் 99.49 சதவீதம் பேர் தமிழீழ அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இங்கு 2 நாட்கள் வாக்கெடுப்பு நடைபெற்றது.
பியல் நகர முன்னாள் மேயர் பாகனியின் நேரடிக் கண்காணிப்பில் தேர்தல் நடைபெற்றது. சுவிடசர்லாந்து நாட்டு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள் இதில் கண்காணிப்பாளர்களாக செயல்பட்டனர்.













Click it and Unblock the Notifications