வேண்டாம் மரபணு மாற்ற கத்தரிக்காய்!-முதல்வரிடம் நடிகை ரோகிணி கோரிக்கை

விவசாய நிபுணர்களுடன் முதல்வரை நேரில் சந்தித்து இந்தக் கோரிக்கையை அவர் முன் வைத்தார்.
'பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பு' என்ற அமைப்பின் நிர்வாகிகள் முதல்வர் கருணாநிதியை இன்று கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தனர்.
இந்தக் குழுவில் அதன் அமைப்பாளர் நடிகை ரோகிணி, வேளாண் நிபுணர்கள் சிவராமன், ஜீவானந்தம், ஷீலு, சங்கீதா உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.
கிட்டத்தட்ட 1 மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயை தமிழ்நாட்டில் அனுமதிக்கக் கூடாது என்று இந்தக் குழு வற்புறுத்தினார்கள். இதன் மோசமான விளைவுகள் குறித்த ஆதாரங்களும் முதல்வரிடம் தரப்பட்டன.
சந்திப்பு குறித்து வேளாண் நிபுணர் சிவராமன் நிருபர்களிடம் கூறுகையில், "மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயை சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்படும். உடல்நிலை பாதிக்கும்.
இவற்றை விட மிக முக்கியம் பாரம்பரிய கத்தரிக்காய் விதை அழியும் அபாயம். பயரிடும் நிலத்துக்கும் பாதிப்பு எற்படுகிறது. இவற்றையெல்லாம் விரிவாக முதல்வரிடம் விளக்கி கூறினோம். அதற்கான ஆதாரங்களையும் அவரிடம் கொடுத்தோம்.
அனைத்து விவரங்களையும் அவர் விவரமாகக் கேட்டுக் கொண்டார். ஆந்திரா, கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாட்டிலும் இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளோம். முதல்வர் நல்ல முடிவு எடுப்பார் என நம்புகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications