பருப்பு வகைகளின் விலையைக் குறைக்க நடவடிக்கை - கருணாநிதி

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் பாணி அறிக்கை:
கேள்வி: ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் தற்போது தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த கடன் சுமை 90 ஆயிரம் கோடி ரூபாய் என்றும், தமிழ்நாட்டில் ஒவ்வொரு குழந்தை பிறக்கும் போதும் தலா 15 ஆயிரம் ரூபாய் கடனுடன் பிறக்கிறது என்றும் சொல்லியிருக்கிறாரே, தமிழக அரசு மட்டும்தான் இந்த அளவிற்கு கடன் பெற்றிருக்கிறதா? மற்ற மாநில அரசுகள் எந்த கடனும் பெற்றது கிடையாதா?.
பதில்: தற்போது எந்த அரசாக இருந்தாலும் கடன் வாங்காமல் திறம்பட ஆட்சி நடத்த முடியாது. மக்களுக்கு தேவையான, அவசியமான திட்டங்களை அதிகத்தொகை செலவழித்து நிறைவேற்ற வேண்டுமென்று திட்டமிடும்போது, கடன் வாங்காமல் அவற்றை எந்த அரசினாலும் நிறைவேற்ற முடியாது.
எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதா பேரவையிலே பேசும்போது தமிழக அரசின் மொத்த கடன் சுமை 90 ஆயிரம் கோடி என்றும், தனி நபர் கடன் 15 ஆயிரம் ரூபாய் என்றும் சொன்ன புள்ளி விவரம் சரியல்ல. உத்தேசமான ஒரு புள்ளி விவரத்தைத்தான் தெரிவித்தார்.
இன்றைய நிலையில் தமிழக அரசுக்கு உள்ள மொத்த கடன் சுமை 74 ஆயிரத்து 858 கோடி ரூபாய். வேறு சில மாநிலங்களின் கடன் சுமையை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், ஆந்திரா மாநிலத்தில் மொத்த கடன் சுமை 92 ஆயிரத்து 465 கோடி ரூபாய். மகாராஷ்டிர மாநிலத்தின் மொத்த கடன் சுமை 1 லட்சத்து 61 ஆயிரத்து 276 கோடி ரூபாய்.
தனி நபர் கடன் சுமை என்று எடுத்துக்கொண்டால் கூட தமிழகத்தில் 12 ஆயிரத்து 54 ரூபாய். ஆந்திராவில் 12 ஆயிரத்து 215 ரூபாய். மகாராஷ்டிரத்தில் 16 ஆயிரத்து 661 ரூபாய். கர்நாடகாவில் 13 ஆயிரத்து 375 ரூபாய். பக்கத்திலே உள்ள சிறிய மாநிலமான கேரளாவிலே கூட 20 ஆயிரத்து 293 ரூபாய். அ.தி.மு.க. ஆட்சிக்காலத்திலே கூட தனி நபர் கடன்சுமை 9,267 ரூபாய் என்ற அளவிற்கு இருந்ததுதான் தற்போது 12 ஆயிரத்து 54 ரூபாய் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது.
எனவே அவரது ஆட்சி காலத்தில் தனி நபர் கடன் சுமையே கிடையாது என்றோ, இப்போது தான் தனி நபர் கடன் சுமை தமிழகத்திலே ஏற்பட்டுவிட்டது என்றோ நினைக்கத் தேவையில்லை.
இவற்றையெல்லாம் விட மத்திய அரசின் இன்றைய கடன் சுமை 31 லட்சத்து 35 ஆயிரத்து 375 கோடி ரூபாய். மத்திய அரசின் தனி நபர் கடன் சுமை 30 ஆயிரத்து 528 ரூபாய். எனவே தமிழக அரசு நிதி பிரச்சினையில் எந்தவிதமான குழப்பத்திலும் இல்லை என்பதை புரிந்து கொள்ளலாம்.
தமிழக அரசின் இன்றைய கடன் சுமையான 74 ஆயிரத்து 858 கோடி ரூபாய் என்பது கூட ஏதோ கடந்த நான்கு ஆண்டு கால தி.மு.க ஆட்சியில் வாங்கியது என்று நினைத்துக்கொள்ள தேவையில்லை.
நான் முன்பே ஒரு முறை குறிப்பிட்டதைப்போல 1996-2001-ம் ஆண்டுகால தி.மு.க. ஆட்சியின் இறுதியில் அதாவது 31-3-2001 அன்று ரூபாய் 28,685 கோடி அளவில் தமிழக அரசின் கடன் பொறுப்புகள் இருந்தன. இதன்பின் அ.தி.மு.க. ஆட்சி நடத்திய 2001-2006-ம் ஆண்டு காலத்தின் இறுதியில் அதாவது 31-3-2006 அன்று மாநில அரசின் கடன் பொறுப்புகள் ரூபாய் 57,457 கோடியாக உயர்ந்தது.
சுருங்கக் கூறின் அ.தி.மு.க. ஆட்சியின் 5 ஆண்டுகால இறுதியில் தமிழக அரசின் கடன் பொறுப்புகள் தி.மு.க ஆட்சி விட்டு சென்றதைவிட இரு மடங்காக உயர்ந்தது புலப்படும். 31-3-2006 அன்று அ.தி.மு.க. ஆட்சியின் இறுதியில் இருந்த ரூபாய் 57,457 கோடி கடன் பொறுப்புகள் 31-3-2009 அன்று மாநில அரசின் மொத்த கடன் பொறுப்புகள் ரூபாய் 74,858 கோடியாக உயர்ந்துள்ளது.
அரசு கடனாக திரட்டும் நிதி ஆதாரங்கள் யாவும் அரசின் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கும் கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
உதாரணமாக ராமநாதபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம், ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் போன்றவைகளை பல லட்சம் மக்களின் அடிப்படை தேவைக்காக நிறைவேற்ற வேண்டுமென்றால் கடன் பெறாமல் நிறைவேற்ற முடியாது என்பதை பொருளாதாரம் தெரிந்தவர்கள் ஒப்புக்கொள்வார்கள்.
கேள்வி: சேலம் மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் சிலர் தி.மு.க.விற்கு வாக்களித்ததற்காக ஜெயலலிதா நடவடிக்கை எடுத்திருப்பதாக சில ஏடுகளில் ஒரு செய்தி வந்துள்ளது, உண்மை தானா?.
பதில்: சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்தின் தலைவராக பா.ம.க.வை சேர்ந்த ஒருவர் இருந்து வருகிறார். அந்த ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த உறுப்பினர்கள் 19 பேர்களாகும். அவர்களில் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் 10 பேர், காங்கிரசை சேர்ந்தவர்கள் 3 பேர், அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் 4 பேர்., பா.ம.க.வை சேர்ந்தவர்கள் 2 பேர்.
ஊராட்சி ஒன்றிய தேர்தலின்போது, தி.மு.க.வும், பா.ம.க.வும் தோழமை கட்சிகளாக இருந்த காரணத்தினால் 10 பேர் தி.மு.க.வை சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும், 2 பேரை மட்டுமே கொண்ட பா.ம.க.வை சேர்ந்த ஒருவரை ஊராட்சி ஒன்றிய தலைவராக வெற்றிபெற செய்ய தி.மு.க. உதவியது.
ஆனால் நாளடைவில் பா.ம.க.வை சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தலைவர் பல தவறுகள் செய்ததின் பேரில், கடந்த 12-12-2009 அன்று தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள், பா.ம.க.வை சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் ஒன்றை கொண்டுவரக் கோரி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு கொடுத்தனர். அதன் அடிப்படையில் 22-1-2010 அன்று அயோத்தியாப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது.
தற்போதுள்ள சட்ட விதிப்படி ஒன்றிய தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டுமென்றால் மொத்த உறுப்பினர்களில் 80 சதவீதம் பேர் அதாவது குறைந்தபட்சம் 16 உறுப்பினர்களாவது நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தால் தான் அந்த தீர்மானத்தை நிறைவேற்ற முடியும்.
அந்த ஊராட்சி ஒன்றியத்தில் தி.மு.க., காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த 13 உறுப்பினர்கள் மட்டுமே நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தால் தீர்மானம் வெற்றி பெற்றிருக்காது.
இந்த சூழ்நிலையில் அ.தி.மு.க.வின் தலைமை இரண்டு உறுப்பினர்களை கொண்ட பா.ம.க.விற்கு ஆதரவாக, அ.தி.மு.க.வின் நான்கு உறுப்பினர்களும் வாக்களித்தால் தி.மு.க.வும், காங்கிரசும் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடித்து விடலாம் என்று கருதி, அந்த கட்சியின் முன்னணி தலைவர் ஒருவர் மூலமாக முயற்சித்து, நான்கு அ.தி.மு.க. உறுப்பினர்களையும் பா.ம.க.விற்கு ஆதரவாக தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டுமென்று சொல்லியனுப்பி தீவிரமாக ஈடுபட்டனர்.
அவர்கள் அவ்வாறு தீவிரமாக ஈடுபட்ட போதிலும், அந்த ஊராட்சி ஒன்றியத்தில் இருந்த நான்கு அ.தி.மு.க. உறுப்பினர்களில் மூன்று பேர், தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளோடு இணைந்து நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக-பா.ம.க.வை சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தலைவருக்கு எதிராக வாக்களித்து தீர்மானத்தை வெற்றி பெற செய்திருக்கிறார்கள்.
இவ்வாறு கட்சி கட்டுப்பாட்டை மீறி நடந்த அ.தி.மு.க.வினர் மீது அந்த கட்சியின் தலைமை தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதான் அயோத்தியாபட்டினம் ஊராட்சி ஒன்றியம் பற்றிய பிரச்சினையாகும்.
கேள்வி: தமிழகத்திற்கு வருகை தந்த மத்தியப்பிரதேச முதல்-அமைச்சர் தமிழக அரசின் மதிய உணவு திட்டத்தை தமிழக அரசு சிறப்பாக நடத்தி வருவதாக செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறாரே?.
பதில்: நானும் அந்த செய்தியினை படித்தேன். நாகை மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மத்திய பிரதேச மாநில அரசு 9.50 கோடி ரூபாய் செலவில் 340 வீடுகளைக்கட்டி கொடுத்து, அந்த வீடுகளை திறப்பதற்காக மத்தியப்பிரதேச முதலமைச்சர், நண்பர் சிவராஜ் சிங் சவுகான் தமிழகத்திற்கு வந்திருந்தார்.
அந்த கட்டிடங்களின் திறப்பு விழாவில் என்னையோ, அல்லது தமிழக அமைச்சர்களையோ கலந்து கொள்ள வேண்டுமென்று கடிதமும் எழுதியிருந்தார்.
அந்த விழாவில் தமிழகத்தின் சார்பில் மத்திய அமைச்சர் பழனி மாணிக்கத்தையும், மாநில அமைச்சர் மதிவாணனையும் கலந்து கொள்ளுமாறு கூறியிருந்தேன். அந்த விழாவிற்கு வந்த மத்திய பிரதேச முதலமைச்சர் பெருந்தன்மையோடு, தமிழக அரசு இந்தியாவிற்கே முன்னோடியாக மதிய சத்துணவு திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருவதாகவும், இந்த திட்டத்தில் நாளுக்கு நாள் பல புதிய முறைகளை புகுத்தி சிறப்பாக செயல்படுத்தி வருவதாகவும், இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வரும் தமிழக அரசை பாராட்டுகிறேன் என்றும், மத்திய பிரதேசத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் மனம் திறந்து பாராட்டியிருக்கிறார்.
மேலும் அவர் அந்த பேட்டியில் தமிழ்நாட்டில் மீனவர்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்குவது பற்றியும், மீனவர்களுக்காக 80 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்துள்ளதை பற்றியும் பாராட்டியிருக்கிறார். இதற்காக நான் தமிழக அரசின் சார்பிலும், என் சார்பிலும் அவருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
கேள்வி:பருப்பு விலை சரிந்துள்ளதாக இன்று ஏடுகளில் செய்தி வந்துள்ளதே? விலைவாசி உயர்வை பற்றி வீண் ஆர்ப்பாட்டம் செய்பவர்களால் இந்த செய்தியை தாங்கிக் கொள்ள முடியாதே?.
பதில்: கடந்த மாத தொடக்கத்தில் 100 கிலோ துவரம் பருப்பு மூட்டை ஒன்று 9 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டதற்கு மாறாக, 23-1-2010 அன்று இதன் விலை 7 ஆயிரமாக குறைந்துள்ளது. மூட்டை ஒன்றுக்கு இரண்டாயிரம் ரூபாய் விலை சரிந்துள்ளது.
இதுபோலவே இரண்டாம் ரக துவரம் பருப்பு விலை மூட்டை 7 ஆயிரம் ரூபாயில் இருந்து 6,500 ரூபாயாக குறைந்துள்ளது. தான்சானியா துவரம் பருப்பு 6,700 ரூபாயில் இருந்து 5,500 ரூபாயாக குறைந்துள்ளது. மியான்மர் துவரம் பருப்பு 6 ஆயிரம் ரூபாயில் இருந்து 5,500 ரூபாயாக விலை குறைந்துள்ளது.
உளுத்தம் பருப்பு விலை மூட்டை ஒன்றுக்கு 7 ஆயிரம் ரூபாயில் இருந்து 6,800 ரூபாயாக விலை குறைந்துள்ளது. முதல் ரக பாசிப்பருப்பு 8 ஆயிரம் ரூபாயில் இருந்து 7,800 ரூபாயாக விலை குறைந்துள்ளது. மொத்த விலை இந்த அளவிற்கு குறைந்தபோதிலும், சில்லரை விற்பனையில் விலை குறையவில்லை என்றும் கூறப்படுகின்றது. மொத்த விலையை தொடர்ந்து சில்லரை விலையையும் குறைக்க உணவுத்துறை; உடனடியாக கவனம் செலுத்திடும் என்று கூறியுள்ளார் முதல்வர்.












Click it and Unblock the Notifications