குடியரசு தினம்-அத்துமீறும் விமானங்களை சுட உத்தரவு
டெல்லி: நாட்டின் 61வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுவதையொட்டி டெல்லி உள்பட நாடு முழுவதும் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ராணுவ அணி வகுப்பு நடக்கவுள்ள டெல்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
டெல்லியில் ஜனாதிபதி பிரதீபா பட்டீல் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றவுள்ளார். இதையடுத்து நாட்டின் கலாச்சாரத்தையும் ராணுவ ஆற்றலையும் வெளிப்படுத்தும் வகையில் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெறவுள்ளது.
இந் நிலையில், லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகள் ஐரோப்பிய நாடுகளில் பாரா கிளைடர்கள் வாங்கியுள்ளதாக வந்துள்ள தகவல்களால், வான்வெளித் தாக்குதல் நடக்கலாம் என்ற அச்சம் பரவியுள்ளது. இதையடுத்து உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக தென் கொரிய அதிபர் லீ மியூக் பாக் பங்கேற்று அணிவகுப்பை பார்வையிடவுள்ளார்.
மேலும் தெற்காசிய நாடுகளில் விமானங்களை கடத்தி இந்தியாவில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறை எச்சரிதுள்ளதால் டெல்லி புறநகர் பகுதிகளிலும், ஜனாதிபதி, பிரதமர் இல்லம், நாடாளுமன்றம் அருகே விமான எதிர்ப்பு பீரங்கிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
டெல்லி உள்பட இந்திய வான் எல்லைக்குள் அத்துமீறி ஊடுருவும் விமானம், ஹெலிகாப்டர்கள், கிளைடர்களை சுட்டுத்தள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெறும் பாதை நெடுக சுமார் 18,000 ராணுவ வீரர்களும் என்எஸ்ஜியைச் சேர்ந்த கமாண்டோக்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
மேலும் குடியரசு தின விழாவின்போது டெல்லி நகரை விமானப் படை விமானங்களும் ஹெலிகாப்டர்களும் கண்காணிக்கவுள்ளன.
அணிவகுப்பு பாதை நெடுக நூற்றுக்கணக்கான கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளன. டெல்லிக்கு வரும் வாகனங்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனையிடப்படுகின்றன.
இதுதவிர நாடு முழுவதும் முக்கிய ரயில் நிலையங்கள், ரயில்கள், பாலங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications