பாக். வீரர்கள் புறக்கணிப்பு-ஐபிஎல் மீது ப.சி. பாய்ச்சல்

இந்த விவகாரம் குறித்து ப.சிதம்பரம் கூறுகையில், பாகிஸ்தான் வீரர்களில் சிலர் டுவென்டி 20 போட்டிகளில் சிறப்பாக விளையாடக் கூடியவர்களாக உள்ளனர். அவர்கள் தனி வீரர்களாகவே ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். பாகிஸ்தான் அணியாக அவர்கள் வரவில்லை.
இப்படிப்பட்ட நிலையில், அவர்களை ஏலத்தில் எடுக்காமல் புறக்கணித்த ஐபிஎல் நிர்வாகத்தின் செயல் நிச்சயம் கிரிக்கெட் விளையாட்டுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவே கருதுகிறேன். ஏன் இப்படி ஐபிஎல் அணி நிர்வாகங்கள் நடந்து கொண்டன என்று எனக்குப் புரியவி்லை.
ஆனால் இந்த விவகாரத்தில் இந்திய அரசுக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை. தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவதை நான் திட்டவட்டமாக மறுக்கிறேன்.
ஒரு நாடு, தனது நாட்டு வீரர்களை இன்னொரு நாடு புறக்கணித்தால் நிச்சயம் கோபப்படத்தான் செய்யும். அவமரியாதையாகத்தான் கருதும். அதேபோலத்தான் தனது நாட்டு வீரர்கள் புறக்கணிப்பட்டது குறித்து பாகிஸ்தான் அரசும் கோபமாக கருத்து தெரிவித்துள்ளது. அதுகுறித்து கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியம் இந்திய அரசுக்கு கிடையாது.
பாகிஸ்தான் வீரர்கள் சேர்க்கப்படாததால் கிரிக்கெட் ரசிகர்கள் நிச்சயம் ஏமாற்றமடைந்துள்ளனர். இந்த செயலைத் தவிர்த்திருக்கலாம்.
ஒரு கிரிக்கெட் ரசிகராக, எனது கருத்து என்னவென்றால் பாகிஸ்தான் வீரர்களும் ஐபிஎல் போட்டிகளில் இணைத்துக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்பதுதான்.
பாகிஸ்தான் வீரர்கள் 17 பேருக்கு நாங்கள் (அரசு) விசா அளித்திருந்தோம். அப்படி இருந்தும் பாகிஸ்தான் வீரர்கள் யாரும் சேர்க்கப்படாதது புரியாத புதிராக உள்ளது என்றார் சிதம்பரம்.
நேற்று பாலிவுட் சூப்பர் ஸ்டாரும், கொல்கத்தை நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளருமான ஷாருக் கானும், பாகிஸ்தான் வீரர்கள் சேர்க்கப்படாதது குறித்து கடும் அதிருப்தி வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அணி நிர்வாகங்கள்தான் அவர்களாகவே பாகிஸ்தான் வீரர்களை ஏலத்தில் எடுக்கவில்லை என்று முன்பு ஐபிஎல் கமிஷனர் லலித் மோடி கூறியிருந்தார். ஆனால் ஷாருக்கானின் பேட்டியைப் பார்க்கும்போது பாக். வீரர்களை எடுக்க வேண்டாம் என ஐபிஎல் நிர்வாகம் நிர்ப்பந்தப்படுத்தியிருக்கலாமோ என்ற சந்தேகம் எழுகிறது.












Click it and Unblock the Notifications