பெங்களூர்: போதையில் வாகனம் ஓட்டினால் சிறை!
பெங்களூர்: குடிபோதையில் வாகனம் ஓட்டும் குற்றத்துக்காக இரண்டாவது முறையாக சிக்கும் வாகன ஓட்டிகளுக்கு கட்டாயம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று பெங்களூர் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் பிரவீன் சூட் எச்சரித்துள்ளார்.
பெங்களூரில் இந்தியன் ஆயில் நிறுவனத்தினரும் மற்றும் பெங்களூர் மேலான்மை சங்கத்தினரும் இணைந்து நடத்திய, 'உள்கட்டமைப்பு மேம்பாடும், எரிசக்தி சேமிப்பும்' என்ற கருத்தரங்கில் கமிஷனர் பிரவீன் கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், 'இனி பெங்களூரில் குடிபோதையில் வாகனம் ஓட்டும் குற்றத்தில் ஈடுபடுவோர் இரண்டாவது முறையாக போலீசாரிடம் சிக்கினால், விதிமீறிய அந்த வாகன ஓட்டி சிறை தண்டனையை கட்டாயம் அனுபவிக்க வேண்டியிருக்கும்.
அதுபோல மற்ற எந்த வீதிமீறலிலும் இரண்டாவது முறையாக சிக்குபவர்கள், சம்பந்தப்பட்ட விதிமீறலுக்கான அபராதத்தை இரண்டு மடங்கு செலுத்த வேண்டியிருக்கும்.
இதை சாத்திமாக்குவதற்காக சுமார் 400 எஸ்.ஐ.களுக்கு 'பிளாக்பெர்ரி' உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே 280 பிளாக்பெர்ரிகள் உபயோகத்தில் உள்ளன.
ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் கூடுதல் பிளாக்பெர்ரிகள் போலீசாருக்கு வழங்கப்பட்டுவிடும். அதன்பின்னர் தொடர்ந்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை போலீசார் சுலபமாக அடையாளம் கண்டுகொள்வார்கள்.
வரும் பிப்ரவரி மாதம் முதல் நகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நிலவரங்களை அவ்வப்போது பொதுமக்கள் எஸ்எம்எஸ் மூலம் தெரிந்துகொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்படும்.
பெங்களூரில் 35 லட்சம் வாகனங்கள் ஓடுகின்றன. இதற்கிடையே ஒரு நாளைக்கு ஆயிரம் வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. வாகன நிறுத்துமிடத்துக்கு பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது' என்றார்.












Click it and Unblock the Notifications