ஸ்ரீநகர் லால் சவுக்கில் கொடியேற்றப்படவில்லை: எல்லையில் பாக். அத்துமீறித் தாக்குதல்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள புகழ் பெற்ற லால் சவுக்கில் கடந்த 19 ஆண்டுகளில் முதல் முறையாக குடியரசு தினத்தையொட்டி தேசியக் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெறவில்லை.
இதற்கான காரணத்தை மாநில அரசு தெரிவிக்கவில்லை. வழக்கமாக பாதுகாப்புப் படையினர் இங்கு கொடியேற்றி குடியரசு தினம், சுதந்திர தினத்தைக் கொண்டாடுவது வழக்கமாகும்.
கடந்த 19 ஆண்டுகளில் இங்கு தேசியக் கொடி ஏற்றாமல் இருந்தது இதுவே முதல் முறையாகும்.
ஸ்ரீநகர் நகரின் மிக முக்கியப் பகுதி இந்த லால் சவுக். எப்போதும் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும் பகுதி. சமீபத்தில் இங்கு 22 மணி நேரம் தீவிரவாதிகள் பெரும் தாக்குதலில் ஈடுபட்டனர் என்பது நினைவிருக்கலாம்.
ஆனால் இன்று முழு அடைப்பு நடத்துமாறு பிரிவினைவாத அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன. இதனால் ஸ்ரீநகரில் மக்கள் நடமாட்டம் அடியோடு குறைந்து காணப்பட்டிருந்தது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
கடந்த 1991ம் ஆண்டு முதல் லால் சவுக்கில் உள்ள மணிக்கூண்டில், எந்த மாதிரியான சூழ்நிலை இருந்தாலும் தேசியக் கொடி ஏற்றுவதை பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டு வந்தனர்.
ஆனால் இன்று அது நடைபெறவில்லை. கடந்த 1991ம் ஆண்டு பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷி, தீவிரவாதிகளின் ராக்கெட் தாக்குதலுக்கு மத்தியிலும் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் என்பது நினைவிருக்கலாம்.
எல்லையில் பாக். அத்துமீறித் தாக்குதல்:
இந் நிலையில் குடியரசு தினத்தையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் உள்ள நிலையில், காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறித் தாக்குதல் நடத்தினர்.
இன்று அதிகாலை 2 மணிக்கு ஜம்மு மாவட்டத்தில் உள்ள அக்னூர், கனசக் பகுதியில் பாகிஸ்தான் வீரர்கள் திடீரென தாக்குதலில் ஈடுபட்டனர். எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிக்குள் ஊடுருவி வந்து இந்த தாக்குதல்களை நடத்தினார்கள். இதையடுத்து இந்திய வீரர்களும் பதிலடி தாக்குதல் நடத்தினார்கள்.
இரு தரப்பினருக்கும் இடையே அதிகாலை 5 மணி வரை துப்பாக்கி சண்டை நீடித்தது. இந்திய எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்கள் தாக்குதலை தீவிரப்படுத்தியதால் பாகிஸ்தான் வீரர்கள் பின் வாங்கிச் சென்றுவிட்டனர்.
துப்பாக்கிச் சண்டை நடந்தபோது தீவிரவாதிகள் சிலர் காஷ்மீருக்குள் ஊடுருவ முயற்சி செய்தனர். அதை எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் முறியடித்தனர்.
காஷ்மீரில் குடியரசு தினவிழாவை சீர்குலைக்கும் திட்டத்துடன் தற்கொலை தீவிரவாதிகள் ஊடுருவ வந்ததாக ஜம்மு டிஜிபி குல்தீப் கூடா கூறினார். அந்த பகுதிக்கு கூடுதல் ராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கடும் பனிப்பொழிவு இருப்பதால் ஜம்மு மாவட்டம் முழுவதும் ராணுவ வீரர்கள் இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணிப்பை தீவிரப்படுத்தினார்கள்.
அக்னூர் பகுதியில் துப்பாக்கி சண்டை ஓய்ந்த பிறகு ஐபி செக்டார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர். அதையும் இந்திய எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் முறியடித்தனர்.
பாகிஸ்தான் வீரர்கள் தங்கள் தாக்குதலின்போது ராக்கெட் வீசியும் தாக்குதல் நடத்தினார்கள். இதில் இந்திய வீரர்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
கடந்த 25 நாட்களில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 15 தடவை எல்லையில் அத்து மீறலில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications