உயிரோடு சவப்பெட்டியில் அடைக்கப்பட்ட முதியவர்!
கடோவிஸ்: இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதால், சவப்பெட்டியில் அடைக்கப்பட்ட முதியவர், உயிர் பிழைத்து வந்த சம்பவம் போலந்து நாட்டில் நடந்துள்ளது.
போலந்து நாட்டின் கடோவிஸ் நகரைச் சேர்ந்த முதியவர் ஜோசப் கூசி ( 76). தேன் சேகரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் இவருக்கு, சில நாட்களுக்கு முன்பு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயக்கமானார்.
அவருடைய இரண்டாவது மனைவி லட்மிளா ஆம்புலன்சை வரவழைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர் முதியவர் இறந்துவிட்டதாக அறிவித்து சான்றிதழும் அளித்துவிட்டார்.
பின்னர், கூசியின் இறுதி சடங்குக்கான வேலைகளில் உறவினர்கள் ஈடுபடத் தொடங்கினர். உடலையும் சவப்பெட்டிக்குள் வைத்தாகி விட்டது.
திடீரென மனைவி லட்மிளா, தனக்கு கணவனின் ஞாபகமாக அவருடைய 'நெக்லேஸ்' வேண்டும் என கூறினார். மூடிய சவப்பெட்டியை திறக்கச் சொல்லி நெக்லேஸை கழற்ற கூசியின் கழுத்தை லட்மிளா தொட்டபோது அதிர்ச்சி அடைந்தார்.
இறுதிசடங்கு செய்யப்படும் முதியவருக்கு நாடித் துடிப்பு இருப்பதாகக் கூறி அலறினார் லட்மிளா. பின்னர் வேறுசிலரும் அதை உறுதிப்படுத்தினர்.
உடனடியாக முதியவரை சவப்பெட்டியில் இருந்து வெளியே தூக்கி, முன்பு கொண்டு சென்ற அதே மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.
மருத்துவர்கள் பரிசோதித்தபோது நிமிடத்துக்கு 20 முதல் 30 துடிப்புகள் என்ற அளவில் இருந்து கொண்டிருப்பது தெரியவந்தது.
உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவில் முதியவரைச் சேர்த்தனர் மருத்துவர்கள். பின்னர் மூன்று நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது ஆரோக்கியமாக வீடு திரும்பியுள்ளார் முதியவர் கூசி.
என் உயிரை காப்பாற்றியது மனைவி லட்மிளா தான் என நன்றியுடன் நினைவுகூர்ந்த முதியவர், ஒரு பானை தேனை அவருக்கு பரிசளித்ததாக மகிழ்ச்சியுடன் கூறினார்.
முதியவரை முன்னதாக பிரிசோதித்த மருத்துவர், தனது தவறான முடிவுக்கு மன்னிப்பு கோரினார்.












Click it and Unblock the Notifications