மாசுக் கட்டுப்பாடு: திருப்பூர் சாய ஆலைகளுக்கு மேலும் 3மாத அவகாசம்
திருப்பூர்: திருப்பூரில் மாசுக்கட்டுப்பாட்டு பணிகளை நிறைவு செய்யாத சாய ஆலைகளுக்கு மேலும் மூன்று மாத அவகாசத்தை உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளதாக திருப்பூர் சாய ஆலை உரிமையாளர் சங்கத் தலைவர் சாமியப்பன் தெரிவித்தார்.
திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் அமைத்துள்ள பொது சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சாயக் கழிவுகள் வெளியேறாமல் இருப்பதை உறுதி செய்யும் 'ஜீரோ டிஸ்சார்ஜ்' பணிகளை நிறைவேற்ற, உச்சநீதிமன்றம் கடந்த 6ம் தேதி வரை அவகாசம் வழங்கியிருந்தது.
இங்கு மொத்தமுள்ள 20 பொது சுத்திகரிப்பு நிலையங்களில், 13 சுத்திகரிப்பு நிலையங்களில் பணிகள் முடிக்கப்பட்டு இசைவாணை பெறப்பட்டது.
பணிகளை நிறைவு செய்யாத, ஆறு பொது சுத்திகரிப்பு நிலையங்கள், அதற்கு உட்பட்ட 78 சாய ஆலைகள், அபராதத் தொகை செலுத்தாத 22 சாய ஆலைகள் என, 100 சாய ஆலைகளை மூட மாசுக் கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டது.
இதையடுத்து 'ஜீரோ டிஸ்சார்ஜ்' நடைமுறையை அமல்படுத்த, மூன்று மாத அவகாசம் கோரி சாய ஆலை உரிமையாளர் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்ப பணியை முடிக்கவும், சோதனை ஓட்டங்களை நடத்தவும், பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு உச்சநீதிமன்றம் மூன்று மாத அவகாசம் வழங்கியுள்ளதாக திருப்பூர் சாய ஆலை உரிமையாளர் சங்க தலைவர் சாமியப்பன் கூறினார்.
இந்த அவகாசத்தில், தொழில்நுட்ப பணிகள், சோதனை ஓட்டம் மற்றும் அபராதம் செலுத்துதல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் முடித்துக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 100 சாய ஆலைகள் மற்றும் ஆறு சுத்திகரிப்பு நிலையங்களையும் இயக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்றம் வழங்கியுள்ள மூன்று மாத அவகாசத்தில், தொழிலை பாதுகாப்பதற்கான அனைத்து பணிகளையும் முடித்து விடுவோம் என சங்கத் தலைவர் சாமியப்பன் கூறினார்.












Click it and Unblock the Notifications