இலங்கை தேர்தல்-தமிழர் பகுதிகளில் வாக்குப்பதிவு மந்தம்

Subscribe to Oneindia Tamil

Few voters turn up in Jaffna
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடந்து முடிந்தது.

வாக்குப் பதிவு சிங்களப் பகுதிகளில் விறுவிறுப்பாகவும், தமிழர் பகுதிகளில் மிகவும் மந்தமாகவும் இருந்தது.

தமிழர்களை வாக்களிக்க விடாமல் அச்சுறுத்த ஆங்காங்கு வெடிகுண்டுகள் வெடிக்கப்பட்டதாகவும் பெருமளவில் முறைகேடுகளும் நடந்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்டவை குற்றம் சாட்டியுள்ளன.

இலங்கையின் 6வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. மாலை 4 மணியுடன் வாக்குப் பதிவு முடிவடைந்தது.

இந்த தேர்தலில் ஒரு கோடியே 40 லட்சத்து 88 ஆயிரத்து 500 பேர் வாக்களிக்க தகுதிபெற்றிருந்தனர். வாக்குப் பதிவுக்காக 11,098 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அனைத்துப் பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தமிழர் பகுதிகளில் மகா மந்தம்...

யாழ்ப்பாணத்தில் நேற்று இரவு முதல் அதிகாலை வரை தொடர் கையெறி குண்டுத் தாக்குதல்கள் நடந்தன. இதனால் வாக்காளர்கள் மத்தியில் பீதி நிலவியது.

ஆனால், காலையிலிருந்தே அங்கு வாக்குப் பதிவு விறுவிறுப்பாக இருப்பதாக அரசுத் தரப்பில் இருந்து செய்திகள் பரப்பப்பட்டன. ஆனால், பிற்பகல் வரை அங்கு மிகக் குறைவான வாக்குகளே பதிவானதாக இறுதிக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல கிளிநொச்சி, முல்லைத்தீவிலும் மகா மந்தமான வாக்குப் பதிவே நடந்துள்ளதாகத் தெரிகிறது.

பிற பகுதிகளில் நிலவரம்...

மன்னாரில் 28 வாக்களிப்பு நிலையங்களும், மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் 42 வாக்களிப்பு நிலையங்களும் மொத்தமாக 70 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 103 வாக்களிப்பு பெட்டிகளும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

மலையக பகுதிகளில் தமிழர்கள் உள்பட அனைத்து மக்களும் ஆர்வத்துடன் வாக்களித்தனர். பெரும்பாலான தோட்டங்களில் காலையில் வேலைக்குச் சென்று 11.00 மணியளவில் திரும்பி வந்து வாக்களிக்க ஆரம்பித்தனர்.

பொகவந்தலாவை, ஹட்டன், மஸ்கெலியா போன்ற நகரங்களில் வாக்களிப்பு நிலையங்களுக்கருகில் போலீஸ், ராணுவ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

கொழும்பில் எவ்வித அசம்பாவிதங்களும் நடக்கவில்லை.

டக்ளஸ் கட்சியினர் முறைகேடு..

இதற்கிடையே, ராஜபக்சே ஆதரவு டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர், யாழ்ப்பாணத்தில் பெரு்மளவில் தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு யாழ்ப்பாணம் எம்.பிக்கள் குற்றம் சாட்டினர்.

தாங்கள் சுட்டிக் காட்டும் நபர்களுக்கு எந்தவித கேள்வியும் கேட்காமல் வாக்கு அட்டைகளை வழங்குமாறு டக்ளஸ் கட்சியினர் தபால் அதிகாரிகளை நிர்ப்பந்தப்படுத்தவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

முகாம்களில் இருக்கும் தமிழர்களின் பெயர்களைப் பயன்படுத்தி போலியான வாக்கு அட்டைகளை விநியோகித்து முறைகேடு நடப்பதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

முகாம் தமிழர்கள் வாக்களிக்க முடியாமல் தடுப்பு...

இதற்கிடையே, வவுனியா மானிக்பாம் முகாமில் உள்ள இடம்பெயர்ந்தோர் தமது வாக்குகளை செலுத்துவதற்காக யாழ்ப்பாணத்திற்கு செல்ல முடியாத நிலையில் இருப்பதாக ஜேவிபி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் எம்.பியான ஹெரத் கூறுகையில், யாழ்ப்பாணத்திற்கான பஸ் சேவைகள் நிறுத்தப்பட்டுவிட்டன. இதனால் முகாமில் உள்ள இடம் பெயர்ந்தோர் வாக்களிக்க முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அரசாங்கம் திட்டமிட்டே இந்த வாக்காளர்கள் வாக்குகளை அளிக்க முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தி வைத்துள்ளது.

ஏற்கனவே இந்த இடம்பெயர்ந்தோருக்கு வாக்களிக்க பஸ் சேவைகளை ஏற்படுத்தி தருவதற்கு அரசாங்கம் உறுதியளித்திருந்தது. எனினும் தற்போது அதனை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்றார்.

மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தின் அதிகாரி பாக்கியசோதி சரவணமுத்து கூறுகையில், வடக்கில், வாக்காளர்கள் தமது வாக்குகளை அளிப்பதில் இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டினார்.

நாளை காலை முடிவு தெரியும்...

வாக்குப் பதிவு முடிந்த நிலையில் உடனடியாக வாக்குகள் எண்ணும் பணி தொடங்குகிறது. 888 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இன்று இரவிலேயே முன்னணி நிலவரம் தெரிந்துவிடும். நாளை காலை முழுமையாக முடிவு தெரிய வரும்.

பதிவான வாக்குகளில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெறுபவரே வெற்றி பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் நடைபெறும் இந்தத் தேர்தலில் அதிபர் ராஜபக்சேவும், முன்னாள் ராணுவத் தளபதி பொன்சேகாவும் நேருக்கு நேர் மோதினர். இவர்கள் தவிர தமிழர்கள் சார்பில் சிவாஜிலிங்கம் உள்பட 22 பேர் களத்தில் இருந்தனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு பொன்சேகா பக்கம் நிற்கிறது. அதேபோல முக்கிய எதிர்க்கட்சியான ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சியின் பெரும் ஆதரவுடன் பொன்சேகா நம்பிக்கையுடன் காணப்படுகிறார்.

ராஜபக்சேவுக்கு ஆரம்பத்திலிருந்தே ஏகப்பட்ட சறுக்கல்கள். அவருடைய நெருங்கிய கட்சிகள் பலவும் பொன்சேகா பக்கம் போய் விட்டன. அதற்கு உச்சமாக முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா திடீரென பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்து விட்டார்.

தமிழர்கள் மத்தியில் பொன்சேகாவுக்கு ஆதரவு காணப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழர் பகுதிகளில் மிகவும் மந்தமான நிலையில் வாக்குகள் பதிவாகியுள்ளதால் முடிவு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

70 சதவீத வாக்குப் பதிவு

வாக்குப் பதிவின் இறுதியின்போது யாழ்ப்பாணத்தில் கிட்டத்தட்ட 15 சதவீத அளவுக்கும், கிழக்கு மாகாணத்தில் 40 சதவீத அளவுக்கும், வன்னியில் 45 சதவீத அளவுக்கும் வாக்குப் பதிவு நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் சராசரியாக 70 சதவீத அளவுக்கு வாக்குகள் பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+