தாயகம் திரும்பும் 'என்ஆர்ஐ'களுக்கு இடஒதுக்கீடு வழங்க கோரிக்கை!
வெளிநாடு வாழ் இந்திய அமைச்சகத்தின் சார்பில் சமீபத்தில் நடந்த எட்டாவது வெளிநாடு வாழ் இந்தியர் மாநாட்டில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசிய துபாய் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும மேலாண்மை இயக்குனர் ஸலாஹூத்தீன்,
அமீரகத்தில் வாழ்ந்து வரும் இந்தியர்கள் தாங்கள் மேலை நாடுகளில் வாழ்வது போல் அல்லாது, தங்களது தாயகத்தில் வாழ்ந்து வருவது போல அதே மொழி, இனம், கலாச்சாரம், பண்பாடு என சிந்தாந்தம் மாறாமல் வாழ்ந்து வருகிறார்கள்.
வளைகுடா நாடுகளில் வரும் காலங்களில் பல்வேறு கட்டமைப்பு திட்டங்கள் மேற்கொள்ளப்பட இருப்பதால் இந்திய முதலீட்டாளர்களுக்கு பெரும் வாய்ப்புகள் இருக்கின்றன.
வெளிநாடு வாழ் இந்திய தொழிலதிபர்கள் இந்தியாவில் முதலீடு செய்வதில் இருக்கும் தடைகள் களையப்பட வேண்டும். இதற்காக ஒற்றைச்சாளர முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாயகம் திரும்பிய பின்னர் அரசுப் பணிக்காக விண்ணப்பிக்கும் போது அவர்களுக்கு முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிப்பது போல் இட ஒதுக்கீடு, வயது உச்சவரம்பு தளர்வு உள்ளிட்டவற்றில் சலுகை வழங்கப்பட வேண்டும்.
இந்தியாவில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களில் வருகை மற்றும் புறப்பாட்டின் போது விண்ணப்படிவத்தை நிரப்பி இமிக்ரேஷன் அலுவலர்களிடம் கொடுப்பதற்காக காத்திருக்கும் முறையினை நீக்கி அவர்களது பாஸ்போர்ட்டில் இருந்தே தேவையான விபரங்களை எடுத்துக் கொள்ளும் வகையில் புதிய முறையை உருவாக்க வேண்டும். வெளிநாடுகளில் இருப்பது போல் இ-கேட் ( E-Gate ) முறையினை அமுல்படுத்த வேண்டும்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் தொடர்பான பிரச்சனைகளைத் தீர்க்க, ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு காவல் நிலையம் மற்றும் நீதிமன்றம் அமைக்க வேண்டும்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனுப்பும் பணத்தினால் அரசுக்கு அந்நியச் செலாவணி வருவாய் கிடைத்து வருகிறது. இவ்வாறு பணம் அனுப்பும் போது எக்ஸ்ஜேஞ்சில் வசூலிக்கப்படும் சேவைக் கட்டணம் நீக்கப்பட வேண்டும்.
இந்திய கல்வி நிறுவனங்களில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் குழந்தைகளுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.
வெளிநாடு வாழ் இந்தியர்களின் குழந்தைகளுக்காக வெளிநாடுகளில் குறிப்பாக வளைகுடா நாடுகளில் இந்திய நிறுவனங்களால் துவக்கப்படும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்க வேண்டும்.
எங்களது துபாய் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் நிறுவனத்தில் பணியாற்றுவோரில் 75 சதவீதம் பேர் இந்தியர்கள் (25,000 தமிழர்கள்) ஆவர். இந்தியாவிற்கு வெளியே அதிக இந்தியர்களை பணியமர்த்திய நிறுவனம் எங்கள் நிறுவனம் தான் என்றார்.
நிகழ்ச்சியில் வெளிநாடு இந்தியர் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி, வெளியுறவுத் துறை இணையமைச்சர் சசி தரூர், ரயில்வே இணையமைச்சர் அஹமது, ஏராளமான வெளிநாடு வாழ் இந்தியர்கள் கலந்து கொண்டனர்.













Click it and Unblock the Notifications