மாலத்தீவுக்கு கடத்தப்படவிருந்த 2212 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு கடத்தப்பட இருந்த 2212 டன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு போலீசார் மாலத்தீவில் விசாரணை நடத்த உள்ளனர். இதனை சுங்க துறை ஆணையர் ராஜன் தெரிவித்தார்.
தூத்துக்குடியை சேர்ந்த ஹரி அன் கோ என்ற நிறுவனம் கடந்த 23ம் தேதி தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு ஐஆர் 64 ரக அரிசியை ஏற்றுமதி செய்ய இருப்பதாக தெரிவித்து ஆவணங்களை சுங்க இலாகாவிற்கு சமர்ப்பித்தது.
அதில் அரிசியின் மதிப்பு ரூ.3 கோடியே 89 லட்சம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து ஆவணங்களை சரிபார்த்து மாலத்தீவு செல்ல இருந்த எம்வி போந்தி-2 என்ற கப்பலில் அரிசி மூட்டை ஏற்றப்பட்டன.
இந்த பணியை சுங்க இலாகா அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது மூட்டைகளை சோதித்து பார்த்தபோது அதில் இருந்தவை ரேசன் அரிசி போல் காணப்பட்டது. அதன் மாதிரிகளை சேகரித்து நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர். அவை ரேசன் அரிசிதான் என அவர்கள் உறுதி செய்தனர்.
இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் கப்பலில் இருந்த 1700 டன் அரிசி மற்றும் கப்பலில் ஏற்ற 19 லாரிகள் மூலம் கொண்டுவரப்பட்ட 192 டன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.
ஹரிஅன் கோ நிறுவனத்திற்கு சொந்தமான குடோனில் இருந்த 320 டன் அரிசியையும் பறிமுதல் செய்தனர். மொத்தம் மாலத்தீவுக்கு கடத்த முயன்ற 44 ஆயிரத்து 240 மூட்டைகளில் இருந்த 2212 மெட்ரிக் டன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து கலெக்டர் பிரகாஷ் கூறுகையில்,
தூத்துக்குடியில் உள்ள ஒரூ தனியார் ஷிப்பிங் நிறுவனத்திற்கு சொந்தமான குடோன், லாரிகள் மற்றும் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் இருந்தும் 2212 டன் எடையுள்ள ரேசன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இது தொடர்பாக அந்த குடோன் மற்றும் ஏற்றுமதி நிறுவனத்தார் ஆந்திராவில் இருந்து இதை வாங்கியதாக தெரிவித்தனர். ஆனால் அவை அனைத்தும் ரேசன் அரிசி என்பதால் இதில் தொடர்புடையவர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றார்.












Click it and Unblock the Notifications