சென்னையில் திடீரென மழை-சாலைகளில் வெள்ளம்!
சென்னை: கடந்த பல நாட்களாகவே பகலில் வெயிலும், இரவில் கடும் பனியுமாக காணப்படும் சென்னை நகரின் சில பகுதிகளில் இன்று திடீரென பெரும் மழை பெய்தது. இதனால் சாலையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் மக்கள் குழம்பிப் போயினர்.
அக்டோபரில் துவங்கிய வடகிழக்கு பருவமழை டிசம்பரில் முடிவடைந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை சென்னை நகரம் முழுவதும் மேகமூட்டமாக இருந்தது. திடீரென்று பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக சென்னை நகரில் முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குறிப்பாக, கிண்டியில் உள்ள சர்தார் படேல் சாலையில் ஆளுநர் மாளிகை அருகே வெள்ள நீர் கரைபுரண்டு ஓடியதால் வாகனங்கள் வெள்ளத்தில் செல்ல முடியாமல் தடுமாறின. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இரு சக்கர வாகன ஓட்டிகள் மழையை சற்றும் எதிர்பாராததால் மழையில் நனைய வேண்டிய நிலை ஏற்பட்டது. வேறு சிலர் மழையில் நனையாமல் இருக்க ஆங்காங்கே வாகனங்களை சாலையோரமாக நிறுத்திவிட்டு, நிழல் குடைகளில் தஞ்சம் புகுந்தனர்.
தண்டையார்பேட்டை, பாரிமுனை, அண்ணாசாலை உள்பட நகரின் பல பாகங்களிலும் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக மழை கொட்டியது.
இந்த திடீர் மழை குறித்து வானிலை ஆய்வு மையத்தினர் கூறுகையில், கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏதும் ஏற்படவில்லை. இது பருவ நிலை மாற்றத்தால் வந்த மழைதான் என்று விளக்கினர்.
இருப்பினும் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு, வானம் மேகமூட்டமாக காணப்படும், சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல கடலோரத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications