சரக்கு விமானத்தில் நடுவானில் புகை-சென்னை திரும்பியது
சென்னை: சென்னையில் இருந்து ஹைதராபாத்திற்கு புறப்பட்ட சரக்கு விமானம் நடுவானில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் மீண்டும் சென்னைக்கு திருப்பப்பட்டு, பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
'புளூடர்ட்' நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு விமானம் இன்று அதிகாலை சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹைதராபாத்திற்கு புறப்பட்டது.
நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது பின்புற இஞ்சினில் திடீரென புகை ஏற்பட்டது. உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தொடர்பு கொண்டார்.
சரக்கு விமான அவசரமாக தரையிறங்க உடனடி ஏற்பாடு செய்யப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டது. ஓடுதளத்தில் தீயணைப்பு ரசாயண கலவை தெளிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தயார் நிலையில் இருந்தன.
பின்னர் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த சரக்குகள் துரிதகதியில் இறக்கப்பட்டன. பின்னர் அந்த விமானம் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
சரியான நேரத்தில் புகையை கண்டுபிடித்து, உடனுக்குடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
புகையுடன் சரக்கு விமானம் தரையிறங்கிய இச்சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் இன்று காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications