40 ஆண்டுகளாக நகை திருடி கோடீஸ்வரரான குடும்பம்!
இவர்களிடம் இருந்து 240 பவுன் நகைகள், 3 சொகுசு கார் உட்பட ரூ.65 லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டன. இதுகுறித்து நெல்லை எஸ்.பி ஆஸ்ரா கார்க் கூறுகையில்,
'நெல்லை ராமையன்பட்டியை சேர்ந்தவர் செல்லையா. இவரது மனைவி முத்துமாரி. வளர்ப்பு மகன் ஹரிகிருஷ்ணன்.
இவர்கள் மூன்று பேரும் விருதுநகரைச் சேர்ந்த உறவினர்கள் 8 பெண்கள் உள்பட 19 பேரை சேர்த்துக்கொண்டு பொதுமக்களிடம் நகை பறிப்பு குற்றத்தில் கடந்த 40 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்துள்ளனர்.
கோயில் திருவிழாக்கள், கும்பாபிஷேகங்கள், மசூதி, ஜெபக் கூட்டம், பீச் என எங்கெல்லாம் கூட்டம் கூடுகிறதோ அங்கெல்லாம் நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் தங்க நகைகளை பறிப்பதை தொழிலாகவே நடத்தியுள்ளனர்.
பொதுவாக இவர்களில் பெண்கள் மட்டுமே திருட்டு வேலையில் அதிகமாக ஈடுபடுத்தப்படுகின்றனர். கூட்டத்துக்குள் ஊடுருவும் பெண்கள் ஏமாந்தவர்களை குறிவைத்து நைசாக நகை, மோதிரம், வளையல் என கிடைத்ததை அபேஸ் செய்வது வழக்கம்.
இவர்களுக்கு பாதுகாப்பாகவும், தப்பியோடுவதற்கு வசதியாகவும் அப்பகுதியில் செல்லையா மற்றும் கூட்டாளிகள் வாகனங்களுடன் தயாராக இருப்பார்கள்.
இவ்வாறு திருடிய பணத்தில் சொகுசு கார்கள், பங்களா வீடுகள், மனைகள் என ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர். தங்களை தொழிலதிபர்களை போல காட்டிக்கொள்ள செல்போன் கடை ஒன்றையும் நடத்துகிறார்கள்.
அதுமட்டுமின்றி திருட்டுத் தொழிலில் கிடைக்கும் பணத்தில் செல்லையா தன் மூத்த மகளை ரஷ்யாவில் எம்.பி.பி.எஸ் படிப்பும், மற்றொரு மகளை நெல்லை சட்டக்கல்லூரியிலும் படிக்க வைத்து வருகிறார்.
பல இடங்களிலும் பக்தர்களிடம் இருந்து இதுபோன்ற புகார்கள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன. உள்ளுர் ஜேப்படிகளின் வேலையாக இருக்கும் என போலீசார் சந்தேகித்து விசாரித்தும் சரியான குற்றவாளிகள் சிக்காமல் இருந்தனர்.
தற்போது போலீசார் பொறி வைத்து இந்த கும்பலை மடக்கியுள்ளனர். இவர்கள் கடலூர், தஞசாவூர், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளனர்.
இந்த கும்பலிடம் இருந்து ரூ.37 லட்சம் மதிப்பிலான 240 பவுன் நகைகள், ரூ.15 மதிப்பிலான 3 சொகுசு கார்கள், 10 லட்சம் மதிப்பிலான எல்ஐசி பத்திரங்கள், 3 இரு சக்கர வாகனங்கள், ஒரு ஆட்டோ, ஒரு நில பத்திரம், கேமிராக்கள், லேப்-டாப்கள் உள்பட ரூ.62 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டன' என்றார்.













Click it and Unblock the Notifications