ஹோட்டல் முற்றுகையிலிருந்து மீண்டு வீடு திரும்பினார் பொன்சேகா - வெளிநாடு செல்ல திட்டம்

தனது பாதுகாப்புக்காக நாட்டை விட்டு சிறிது காலம் வெளியேறி இருக்கப் போவதாக அவர் கூறியுள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி முன்னணி நிலவரம் வெளியாகத் தொடங்கியதுமே பொன்சேகா தங்கியிருந்த சின்னமான் ஹோட்டலை ராணுவத்தினர் முற்றுகையிடத் தொடங்கினர்.
ஹோட்டலை விட்டு பொன்சேகா வெளியேற முடியாதபடி தடுப்பாக நிறுத்தப்பட்டனர். இதனால் பொன்சேகா கைது செய்யப்படக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.
நேற்று முழுவதும் நீடித்த இந்த நாடகத்தால் இலங்கையில் மட்டுமல்லாது உலக நாடுகளிலும் கூட பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் ஒரு வழியாக நேற்று இரவுக்கு மேல் பொன்சேகா ஹோட்டலை விட்டு வெளியேறினார். நேராக தனது வீட்டுக்குப் போய் விட்டார்.
முன்னதாக அவர் அளித்த பேட்டியில், தனது சொந்தப் பாதுகாப்புக்காக நாட்டை விட்டு வெளியேறி சில காலம் வெளிநாட்டில் வசிக்கப் போவதாக தெரிவித்தார் பொன்சேகா.
சட்டம் ஒழுங்கு கிடையாது:
பிபிசிக்கு அவர் அளித்த பேட்டியில், இலங்கையில் சட்டம் ஒழுங்கு கிடையாது. நான் விமான நிலையத்துக்கு செல்வதும் தடுக்கப்பட்டுள்ளது. நாட்டை விட்டு செல்ல எனக்கு அனுமதி அளிக்கப்படக் கூடாது என்று அவர்கள் விமான நிலைய அதிகாரிகளுக்கு கூறியுள்ளனர். இது பற்றி ஏதும் சொல்ல முடியாது.
நான் மக்களை மறக்க மாட்டேன். ஆனால் நான் உயிர் வாழ சில பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. எந்த நாட்டுக்குப் போகப் போகிறேன் என்பது பற்றி நான் கூற முடியாது. மக்களுடன் தொடர்பில் இருப்பேன்.
தேர்தலில் பெருமளவு முறைகேடுகள் நடைபெற்றன. எனவே தேர்தல் முடிவை ஏற்க முடியாது என்றார்.
அதேபோல செய்தியாளர்களிடையே பொன்சேகா பேசுகையில், தேர்தலில் வாக்கு மோசடிகள் நடந்துள்ளன. அரசு மீடியாக்களைப் பயந்படுத்தி எனக்கு எதிராக பிரசாரம் நடத்தப்பட்டது.
சட்டரீதியான நடவடிக்கை:
தேர்தல் முடிவுகளை செல்லுபடியற்றதாக்குமாறு தேர்த ஆணையாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளேன். இக்கோரிக்கைக்கு உரிய பதில் கிடைக்காது போனால் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளேன்.
தேர்தல் ஆணையாளரின் உத்தரவின்படியே தனக்கு கூடுதல் பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். ஆனால் அவர்களில் 12 பேரை ராணுவ போலீஸ் படையிலிருந்து தப்பி வந்தவர்கள் என்று கூறி கை விலங்கிட்டு, சித்திரவதை செய்து ராணுவத்தினர் அழைத்துச் சென்றுள்ளனர்.
மேலும் 60 படைவீரர்களை திருப்பியனுப்புமாறு தமக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. என்னைக் கொலை செய்யவும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
இதனால்தான் நான் வீட்டில் தங்காமல் ஹோட்டலுக்கு இடம் பெயர்ந்தேன் என்று கூறியிருந்தார் பொன்சேகா.
நாட்டை விட்டு வெளியேற பொன்சேகாவுக்கு இப்போதைக்கு அனுமதி கிடைக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேளை அனுமதி கிடைத்தால் அவர் அமெரிக்காவுக்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாகனங்கள் - பாதுகாவலர்களை ஒப்படைத்தார்:
இந்த நிலையில் நேற்று இரவு தனக்கு அளிக்கப்பட்ட அரசு வாகனங்கள், பாதுகாவலர்களை அரசிடமே ஒப்படைத்து விட்டார் பொன்சேகா.
புல்லட் புரூப் வாகனங்கள் உள்ளிட்ட நான்கு வாகனங்கள், 20 பாதுகாவலர்களை பொன்சேகா ஒப்படைத்துள்ளதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா தெரிவித்துள்ளார்.
மேலும் நேற்று இரவு ஹோட்டலை விட்டு அவர் வெளியேறியபோது எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாமல் சென்றதாக ஜனதா விமுக்தி பெரமுனா கட்சியின் எம்.பி. விஜித ஹெரத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications