2016ல் விண்வெளிக்கு பயணியர் விண்கலம்-இஸ்ரோ மும்முரம்

இந்தியா சார்பில் முதல்முறையாக, 'பயணியர் விண்கல'த்தை வரும் 2016ம் ஆண்டு விண்வெளிக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் இந்திய தேவைக்கு ஏற்ப பிரத்தியேகமாக தயாராகி வருகிறது.
பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்படும் இந்த விண்கலத்தில் 2 விஞ்ஞானிகள் 7 நாட்கள் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொண்டு பூமிக்கு திரும்புவார்கள்.
ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இந்த விண்கலம் அடுத்த ஆறாவது ஆண்டில் புறப்படும்.
முன்னதாக இந்த பயணத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி முடிப்பதற்கு முன்னோட்டமாக மாதிரி திட்டத்தையும் இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்து வருகின்றனர்.
விண்கலத்தை இயக்கும் விண்வெளி வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பணிகளும் தயாராகி வருகின்றன.
இந்தியாவின் சார்பில் முதல் முறையாக விண்வெளிக்கு பயணியர் விண்கலத்தை அனுப்பும் இந்த திட்டத்துக்கு மொத்தம் 124 பில்லியன் கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரோவின் இந்த முயற்சிக்கு மத்திய அரசு ஏற்கனவே கொள்கை அடிப்படையிலான ஒப்புதலை அளித்துவிட்டது.
தேவையான நிதியும் நடப்பு மற்றும் அடுத்து வரும் ஐந்தாண்டு திட்டத்தில் இரண்டு கட்டங்களாக ஒதுக்கப்படும் என்று திட்டக்கமிஷன் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா ஏற்கனவே அறிவித்துள்ளார்.
இந்நிலையில், பெங்களூரில் நூல் வெளியீட்டு விழா ஒன்றில் கலந்துகொள்ள வந்த இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் இதுபற்றி கூறுகையில்,
'2016ம் ஆண்டில் திட்டமிட்ட படி இந்தியா 2 விஞ்ஞானிகளை ஏற்றிக்கொண்டு பயணிக்கும் விண்கலத்தை விண்ணில் செலுத்தும்.
அதற்கான ஆயத்தப் பணிகள் நடந்துவருகின்றன. மாதிரி திட்ட வடிவமைப்புப் பணிகள் அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் முடிவடையும் என எதிர்ப்பார்க்கிறோம்.
விண்வெளி பயணம் மேற்கொள்லும் விஞ்ஞானிகளை தேர்வு செய்யும் பணிகளும் நடந்து வருகின்றன. விண்வெளி பயணத்தின் போது மேற்கொள்ள வேண்டிய கையாள வேண்டிய வழிமுறைகள் தொழில்நுட்ப விவகாரங்கள் போன்றவை விண்வெளி வீரர்களுக்கு வழங்கப்படும்' என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications