மகாராஷ்டிர அமைச்சரையும் விசாரிக்க கோரும் கசாப்

ம், அப்புறம் என்று கன்னத்தில் கை வைத்து கதை கேட்கும் நிலைக்குப் போய் விட்டது மும்பை தீவிரவாதத் தாக்குதலை விசாரித்து வரும் தனி கோர்ட். காரணம், ஒவ்வொரு முறையும் கசாப் கூறி வரும் கதை, திரைக்கதை, வசனத்தைக் கேட்டு.
நேற்று கசாப் சார்பில் அவனது வக்கீல் கே.பி.பவார் ஒரு வேண்டுகோள் வைத்தார். அவர் கூறுகையில், மும்பை தாக்குதல் சம்பவத்தில், உள்ளூரைச் சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு உள்ளது என்று அமைச்சர் ராணே கூறியுள்ளார். எனவே அவரையும் விசாரிக்க வேண்டும் என்று கசாப் கூறுவதாக பவார் தெரிவித்தார்.
ஆனால் இந்த கோரிக்கையை நீதிபதி தஹிளியானி நிராகரித்து விட்டார். மேலும், வழக்கை பிப்ரவரி 20ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
ஏற்கனவே ராணேவின் கருத்து தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி புருஷோத்தம் பார்டே என்பவர் பம்பாய் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
வோரா கமிட்டியின் அறிக்கையின் அடிப்படையில் பொதுவான கருத்தையே தான் கூறியதாகவும், குறிப்பிட்ட சம்பவத்தைப் பற்றி கூறவில்லை எனவும் ராணே தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications