ராஜஸ்தானில் மின்சார உற்பத்தியைத் துவக்கியது என்எல்சி!
நெய்வேலி: என்.எல்.சி.யின் ராஜஸ்தான் மாநில அனல் மின் நிலைய பிரிவில், மின்சார உற்பத்தி துவங்கியுள்ளது.
இத்தகவலை என்.எல்.சி சேர்மன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் சார்பில் நெய்வேலி பாரதி மைதானத்தில் குடியரசு தினவிழா நடைபெற்றது. இதில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து என்.எல்.சி. சேர்மன் அன்சாரி பேசியதாவது:
உலகில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியிலும் கூட, இந்தியாவின் வளர்ச்சி விகிதமும், பிற பொருளாதார அளவீடுகளும் சிறு அளவில் மட்டுமே பாதித்துள்ளது.
இது, நமது பொருளாதாரத்தின் அடிப்படை வலிமையையும், நாம் கடைபிடித்து வரும் பொருளாதாரக் கொள்கைகளின் மதிப்பையும் உணர்த்துகிறது.
நமது நிறுவனம் பல்வேறு பிரச்னைகளுக்கு இடையில் பணியாளர்களின் கடின உழைப்பு மற்றும் ஒத்துழைப்பால், அனைத்துத் துறைகளிலும் புதிய சாதனை படைத்து வருகின்றது.
விரிவாக்கத் திட்டங்களை பொறுத்தவரையில் ராஜஸ்தான் மாநிலம் பர்சிங்சார் சுரங்கத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியும், அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தியும் துவங்கியுள்ளது.
தூத்துக்குடியில் தமிழ்நாடு மின் வாரியத்துடன் இணைந்து ஆயிரம் மெகா வாட் மின் நிலைய கட்டுமானப் பணி துவங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் தென் பகுதிகளான கம்பம் மற்றும் செங்கோட்டையில் 50 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை மூலம் மின்சக்தி தயாரிக்கும் மின் திட்டத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத் திட்டம் தொடர்ந்து 200 மெகா வாட்டாக அதிகரிக்கப்படும்.
தூத்துக்குடி முதல் கன்னியாகுமரி வரை கடற்கரையிலிருந்து 1 கி.மீ அருகில் ஆயிரம் மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட காற்றாலைகள் அமைக்கப்பட உள்ளன.
இது போன்ற வளர்ச்சிப் பணிகள் மூலம் நமது நிறுவனத்தை, தேசிய அளவில் தலைசிறந்த நிறுவனமாக செயலாற்ற முடியும்" என்றார்.












Click it and Unblock the Notifications