எம்.ஜி.ஆர். பாடிய-தேடிய தலைவி நான்: ஜெயலலிதா

Subscribe to Oneindia Tamil

M G R and Jayalalitha
சென்னை: அதிமுகவுக்கு தலைமை தாங்க எம்.ஜி.ஆர். தேடிய தலைவி தான் நான். அதனால் 'ராமன் தேடிய சீதை' படத்தில், என்னைப் பார்த்து "திருவளர்ச் செல்வியோ! நான் தேடிய தலைவியோ!" என்று மிகத் தெளிவாக, என்னைப் பற்றி எம்.ஜி.ஆர். பாடியிருக்கிறார் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறினார்.

அதிமுக நிர்வாகிகள் 6 பேரின் இல்லத் திருமண விழா சென்னை அருகேயுள்ள வானகரம், ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நடந்து. திருமணங்களை நடத்தி வைத்து ஜெயலலிதா பேசுகையில்,

மகிழ்ச்சிக்குரியது மண வாழ்க்கை. இது கடவுள் அளித்த வெகுமதி. மனிதர்கள் தனித்து வாழ முடியாது. எனவேதான், குடும்பம், நட்பு, உறவு என்ற பாசக் கயிற்றால் பிணைப்பட்டு வாழ்கிறோம்.

மணமக்கள் தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரிடத்திலும் ஒற்றுமையை கடைப்பிடித்து, விட்டுக் கொடுத்து, உறுதியுடன் வாழவேண்டும். இன்பமும், துன்பமும் நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றது. துன்பங்களை எதிர்கொள்வதும், வெல்வதும்தான் வாழ்வின் சுவை. அதுதான் வாழ்க்கையை வளப்படுத்தும்.

அண்மையில் சட்டப் பேரவையில் பேசிய நான், "ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே" என்று 'பணத்தோட்டம்' படத்தில் எம்.ஜி.ஆர். பாடிய பாடல் வரிகளை நினைவுகூர்ந்து பேசினேன்.

பேரறிஞர் அண்ணாவை மனதில் வைத்துதான் எம்.ஜி.ஆர். அவ்வாறு பாடினார். ஆனால் "தலைவன் இருக்கிறான்" என்று பாடியது தன்னைப் பற்றிதான் என்று கருணாநிதி கூறியிருக்கிறார்.

மேலும் "ஒரு தலைவி இருக்கிறார்" என்று எம்.ஜி.ஆர். பாடவில்லை என்றும் கருணநிதி குறிப்பிட்டுள்ளார். 1963ம் ஆண்டு நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது எம்.ஜி.ஆர். என்னைப் பற்றி எவ்வாறு பாடியிருக்க முடியும்?.

எனினும், என்னையே தலைவி என்று தெளிவாகக் குறிப்பிட்டு எம்.ஜி.ஆர். பின்னர் பாடினார். நானும், எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த 'ராமன் தேடிய சீதை' என்ற படத்தில், என்னைப் பார்த்து "திருவளர்ச் செல்வியோ! நான் தேடிய தலைவியோ!" என்று மிகத் தெளிவாக, என்னைப் பற்றி எம்.ஜி.ஆர். பாடியிருக்கிறார்.
அதிமுகவுக்கு தலைமையேற்று, அவரது பணியை நான் தொடர வேண்டும் என்பதற்காகவே எம்.ஜி.ஆர். அந்த பாடலை பாடியுள்ளார்.


2011ல் அதிமுக இருக்காது என்று திமுகவினர் பேசி வருகின்றனர். 2011 வரட்டும். யார் வெல்லப் போகிறார்கள்? யார் இருக்கும் இடம் தெரியாமல் ஓடப் போகிறார்கள்? என்பதைப் பார்க்கத்தான் போகிறோம்.

அதிமுகவை அழிக்கக்கூடிய சக்தி, இன்னும் இந்த உலகில் தோன்றவில்லை. அதிமுக என்றும் பதினாறு. அதிமுகவை எந்தக்காலத்திலும், யாராலும் அழிக்க முடியாது.

தமிழகத்தில் மீண்டும் எம்.ஜி.ஆர் ஆட்சி அமைய அதிமுகவினர் ஒற்றுமையாக உழைக்க வேண்டும். அதிமுக ஆட்சி அமையும் நன்னாளை தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த ஆவல் விரைவில் நிறைவேறும் என்றார் ஜெயலலிதா.

ரயில் திட்டங்கள்-மம்தாவுக்கு ஜெ கோரிக்கை:

இந் நிலையில் ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜிக்கு ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தை அக் கட்சியின் எம்பிக்கள் மம்தாவிடம் வழங்கினர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னை-மதுரை ரயில் தடம் தமிழகத்தின் மிக முக்கியமான தடமாகும். ஆனால் இத்தடத்தில் இப்போதும் 80 சதவீதம் ஒரு வழிப் பாதையாகவே உள்ளது. செங்கல்பட்டு-விழுப்புரம் இரட்டைப் பாதைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இரண்டு ஆண்டுகளுக்குள் முழுப் பாதையையும் இரட்டைப் பாதையாக மாற்ற துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை-திருச்சி பாதை மட்டுமே மின்மயமாக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை மின்மயமாக்க இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. எனவே, போதுமான தொகை ஒதுக்கி, திருச்சி-மதுரை, மதுரை-கன்னியாகுமரி, கன்னியாகுமரி-தூத்துக்குடி பாதையை மின்மயமாக்க வேண்டும்.

கோயம்புத்தூர்-திண்டுக்கல் (பழனி வழி) ரயில் பாதையை அகலப்படுத்தும் பணி கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இப்போதைய நிலையில் பணிகள் தொடர்ந்தால், இப்பணிகள் முடிய மேலும் 10 ஆண்டுகள் ஆகும் எனத் தெரிகிறது. எனவே இன்னும் ஓராண்டுக்குள் பணியை முடிக்கும் வகையில் தேவையான நிதியை உடனடியாக ஒதுக்க வேண்டும்.

சென்னை-புதுச்சேரி (மாமல்லபுரம் வழி) கடற்கரை ரயில் பாதைக்கு ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பணிகள் இன்னும் தொடங்கவில்லை. எனவே, தேவையான நிதியை ஒதுக்கி பணிகளை விரைவில் தொடங்க வேண்டும்.

அரியலூர்-தஞ்சாவூர், திண்டுக்கல்-குமுளி, தர்மபுரி-மொரப்பூர், நீடாமங்கலம்-மன்னார்குடி, திருவண்ணாமலை-ஜோலார்பேட்டை, தஞ்சாவூர்-புதுக்கோட்டை (கந்தர்வக்கோட்டை வழி) ஆகிய புதிய ரயில்வே பாதைகளுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. ஆனால் இத்திட்டங்களுக்கு மாநில அரசு 50 சதவீத நிதியை தர வேண்டும் எனக் கூறி, மத்திய திட்டக் குழு அனுமதி தர மறுக்கிறது. இந்தப் பாதைகளுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

சென்னை-வேளச்சேரி வரையிலான பறக்கும் ரயில் திட்டத்தை பரங்கிமலை வரை நீட்டிக்கும் பணியை விரைவில் முடிக்க வேண்டும். அதற்கான கூடுதல் நிதியை விரைவில் ஒதுக்க வேண்டும். மேலும் கோவை-ஈரோடு, கோவை-பொள்ளாச்சி, மதுரை-விருதுநகர், மதுரை-திண்டுக்கல் ஆகிய தடங்களில் புறநகர் ரயில் சேவையைத் தொடங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+