2,000 பேரை புதிதாக பணியமர்த்தும் ஆரக்கிள்
நியூயார்க்: பிரபல சாப்ட்வேர் தயாரிப்பு நிறுவனம் ஆரக்கிள் தனது விற்பனை மற்றும் பொறியியல் பிரிவுக்கு 2,000 புதிய பணியாளர்களை நியமிக்கிறது.
இது குறித்து ஆரக்கிள் சிஇஓ லாரி எல்லிஸன் வால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு அளித்த பேட்டியில், உயர் தொழில் நுட்பம் கொண்ட கம்ப்யூட்டர்கள் உற்பத்தியில் கவனம் செலுத்தப் போவதாகவும் அதற்கென விற்பனை மேலாண்மை மற்றும் என்ஜினியரிங் படித்த 2000 புதிய பணியாளர்களை நியமிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார்.
இன்னொரு பக்கம், சன் மைக்ரோசிஸ்டம் நிறுவனத்தை இணைக்கும் முயற்சியிலும் தீவிரமாக உள்ளது ஆரக்கிள். இப்போது ஆரக்கிளில் மட்டும் 83366 பணியாளர்கள் உள்ளனர். சன் மைக்ரோசிஸ்டம் நிறுவனத்தில் 27596 பேர் பணியாற்றுகிறார்கள்.
இந்த இணைப்புக்கு முன் சன்னில் உள்ள பணியாளர் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்படும் என்று ஏற்கெனவே ஆரக்கிள் அறிவித்திருந்தது.
ஆரக்கிள் புதிய நியமனங்களை மேற்கொள்வதன் மூலம், சன்னில் குறைக்கப்படும் ஊழியர் எண்ணிக்கையை சரி கட்டிக் கொள்ளும் என்று லாரி எல்லிஸன் கூறியுள்ளார்.
ஆரக்கிளுடன் இணைவதற்கு வசதியாக சன் மைக்ரோசிஸ்டம்ஸ் அமெரிக்க பங்குச் சந்தையான நாஸ்டாக்கிலிருந்து வெளியேறிவிட்டது. விரைவில் இணைப்பு நடவடிக்கை முழுமையாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆரக்கிள் நிறுவனம் 7.4 பில்லியன் டாலருக்கு சன் மைக்ரோசிஸ்டம் நிறுவனத்தை கையகப்படுத்துகிறது.












Click it and Unblock the Notifications