ஷிரடி கோயிலில் இனி விஐபி தரிசனத்துக்கு கட்டணம்!
மும்பை: ஷிரடி சாய்பாபா கோயிலில் இனி 'விஐபி பாஸ்'கள் செல்லாது. பல்வேறு சிறப்பு பூஜை மற்றும் தரிசனத்துக்கு ரூ.250 முதல் 500 வரை வசூலிக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
திருவிழா மற்றும் வார இறுதி நாட்களில் ஷிரடி சாய்பாபா கோயிலில் ஏராளமான பக்தர்கள் பல்வேறு பூஜைகள் மற்றும் தரிசனத்துக்காக வருவது வழக்கம்.
குறிப்பாக பலர் விஐபி தரிசன முறையில் பிரத்தியே அனுமதிச் சீட்டு அல்லது பரிந்துரைக் கடிதங்களை பயன்படுத்தி கோயிலுக்குள் சென்று சிறப்பு பூஜைகளில் பங்கேற்று வந்தனர்.
தற்போது இந்த நடைமுறையை மாற்றி, சிறப்பு வழிபாட்டுக்காக வரும் பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து ஷிரடி அறக்கட்டளை நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'கோயில் அறங்காவலர்கள், மாநில சட்ட அமைச்சர் ராதாகிருஷ்ணா உள்ளிட்டோர் பங்கேற்ற கூட்டத்தில் இந்த கட்டண முறை பற்றிய முடிவை ஒருமனதாக தீர்மானித்தோம்.
முன்னோட்ட முயற்சியாக முதல் மூன்று மாதங்களுக்கு இந்த கட்டண முறையை அமல்படுத்தி பார்ப்போம். இதனால் விஐபி பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே பாதிப்படைவார்கள்.
பொதுவான பக்தர்களுக்கு வசதி தான் ஏற்படும். தினசரி 50 ஆயிரம் பக்தர்கள் வரும் இக்கோயிலில் இதுபோன்ற ஒழுங்குமுறை அவசியம் என்ற அடிப்படையில் தான் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வார இறுதி நாட்களில் கூட்டம் கூடுதலாவதால் கட்டுப்படுத்த இயலவில்லை. எனவே, பல்வேறு சிறப்பு பூஜைகளுக்கும் ரூ.250 முதல் ரூ..500 வரை கட்டணமாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது' என்றார்.












Click it and Unblock the Notifications