இ.மு. தலைவர் கொலை வழக்கு: தடா கைதிகள் ஆஜர்
நெல்லை: மதுரை இந்து முன்னணி தலைவர் கொலை வழக்கில் தடா கைதிகள் மீதான விசாரணை நெல்லை கோர்ட்டில் இன்று துவங்கியது.
மதுரை இந்து முன்னணி தலைவர் ராஜகோபாலன் கடந்த 94ம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கோவையை சேர்ந்த சாகுல் ஹமீது, ஜாகீர் உசேன், சுபேதர், ராமநாதாபுரம் அப்துல் அஜீஸ், மதுரை சீனி நைனா முகமது, ராஜா உசேன் ஆகியோர் தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீதான வழக்கு நெல்லை மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. இதில் ஜாமீனில் உள்ள சீனி நைனா தவிர மற்றவர்கள் கோவை மற்றும் சென்னை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கில் இதுவரை 32 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். தடா சட்டம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து தாங்கள் அந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது செல்லாது என அறிவிக்க கோரி சாகுல் ஹமீது சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் இதுகுறித்து அரசு சீராய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டுமென உத்தரவிட்டனர். அதன்படி உள்துறை செயலாளர் தலைமையில் சீராய்வு குழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது.
அதில் சாகுல் ஹமீது உள்ளிட்டோர் தடா சட்டத்தில் கைது செய்தது செல்லும் என கூறப்பட்டது. எனவே அவர்கள் மீதான வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து கோவை மற்றும் சென்னை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாகீர் உசேன் உள்ளிட்டோர் நேற்று மாலை பாளை மத்திய சிறைக்கு கொண்டு வரப்பட்டனர்.
இன்று அனைவரும் பலத்த பாதுகாப்புடன் நீதிபதி விஜயராகவன் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் நீதிபதி விசாரணை நடத்தினார்.












Click it and Unblock the Notifications