பாதுகாப்பு- இந்தியாவை அணுகும் பொன்சேகா தரப்பு
கொழும்பு: பொன்சேகாவின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் அவருக்குப் பாதுகாப்பு தரக் கோரி இந்தியாவை அணுகவிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவரும், மக்கள் ஜனநாயகக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே 58 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு 40 சதவீத வாக்குகள் கிடைத்தன. தேர்தல் முடிவு வெளியான சிறிது நேரத்தில், சரத் பொன்சேகா தங்கியிருந்த ஹோட்டலை ராணுவம் சுற்றி வளைத்தது.
இதனால், தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக சரத் பொன்சேகா அச்சம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பொன்சேகாவுக்குப் பாதுகாப்பு தரக் கோரி இந்தியாவை அணுகவுள்ளதாக மனோ கணேசன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பொன்சேகா, பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அண்டை நாடான இந்தியாவின் தூதரக அதிகாரிகளை சந்தித்து, பொன்சேகாவின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்குமாறு கோரிக்கை விடுப்பேன் என்றார்.
இருப்பினும் இதுவரை பொன்சேகா அதிகாரப்பூர்வமாக இந்தியாவிடம் பாதுகாப்பு அளிக்குமாறு எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை. ஆனால் அவர் சார்பில் மனோ கணேசன் இந்தியாவை அணுகவுள்ளதாக கூறப்படுகிறது.
எல்லோருக்கும் நன்றி-ராஜபக்சே:
இந் நிலையில் அதிபர் தேர்தலில் நான் பெற்ற வெற்றி, மக்களுக்குக் கிடைத்த வெற்றி. அனைவருக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ராஜபக்சே.
அதிபர் தேர்தல் வெற்றிச் செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் ராஜபக்சே.
அப்போது அவர் கூறுகையில், பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட பின்னர் நடத்தப்பட்ட முதலாவது தேசிய ரீதியான தேர்தலில் மக்கள் எனக்கு மாபெரும் ஆணையை வழங்கியுள்ளனர்.
வடக்கு கிழக்கைச் சேர்ந்த மக்களும் எவ்வித அச்சமும் இன்றி தேர்தலில் கலந்து கொண்டனர்.
தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடந்தது பெருமை தருகிறது. தேர்தல் வெற்றியை யாராலும் மாசுபடுத்த முடியாது.
இனிமேல் நாட்டின் மீது பற்று கொண்ட அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட முடியும்.
இந்தத் தேர்தல் வெற்றி நாட்டு மக்கள் அனைவருக்கும் உரித்தானது. இதனை அமைதியான முறையில் கொண்ட வேண்டும்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம். சட்டத்தை பாதுகாப்போர் மட்டுமே சட்டத்தின் பாதுகாப்பைப் பெற முடியும்.
நாட்டின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்த யாருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது.
தேசத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட தனி நபர்களுக்கோ அல்லது குழுக்களுக்கோ அனுமதி கிடையாது.
அனைவருக்கும் ஒரே சட்டம்தான். சட்டத்திற்கு புறம்பான வகையில் செயற்படுவோர் பாரபட்சமில்லாமல் தண்டிக்கப்படுவர்.
பேதங்களை களைந்து நாட்டை வளப்படுத்தும் முயற்சியில் அனைவரும் கைகோர்த்து செயல்பட வேண்டும்.
தேர்தலில் வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். எந்த வேட்பாளருக்கு வாக்களித்திருந்தாலும் அது ஜனநாயகத்தை நிலைநாட்ட மக்கள் எடுத்துக்கொண்ட முயற்சியாகவே கருதப்பட வேண்டும்.
தேர்தலை வெற்றிகரமாக நடத்த ஒத்துழைப்பு வழங்கிய சகல தரப்பினருக்கும் நன்றி என்றார் ராஜக்சே.
யாரையும் தப்ப விடக் கூடாது - கோத்தபயா உத்தரவு...
இதற்கிடையே, சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட யாரும் வெளிநாடு செல்ல அனுமதிக்கக் கூடாது என்று கொழும்பு சர்வதேச விமான நிலைய அதிகாரிகளுக்கு ராஜபக்சேவின் தம்பி கோத்தபாய உத்தரவிட்டுள்ளார்.
அதிபர் தேர்தல் நடந்த சமயத்தில் ராணுவத்தைச் சேர்ந்த முன்னாள் அதிகாரிகள் பலர் பொன்சேகாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. அந்த அதிகாரிகள் தற்போது நாட்டை விட்டு வெளியேற தீர்மானித்திருப்பதாக கூறப்படுகிறது.
இவர்களை வெளியேற விடாமல் தடுக்கும் வகையிலேயே கோத்தபயா இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications