பெரியாறு அணையை உடைப்பதே கேரளாவின் நோக்கம்-வைகோ
தேனி: முல்லைப் பெரியாறு அணையை கேரள அரசு உடைக்க முயன்றால், தமிழ்நாட்டில் இருந்து பால் உட்பட ஒரு துரும்பை கூட அவர்கள் எதிர்பார்க்க முடியாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார்.
பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா அரசின் தவறான நடவடிக்கைகளை தடுக்க தவறும் மத்திய அரசை கண்டித்து தேனியில் மதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு வைகோ தலைமை வகித்து பேசுகையில், தென் தமிழகத்தின் வாழ்வாதாரமாக பெரியாறு அணை விளங்கி வருகிறது.
பெரியாறு அணையில் இருந்து 999 ஆண்டுகளுக்கு தண்ணீர் பெற தமிழகத்திற்கு உரிமை உள்ளது. இதை தடுக்க கேரளா அரசு பல்வேறு தவறுகளை செய்து வருகிறது. இதற்கு மத்திய அரசும் துணை போகிறது.
ஏற்கனவே தண்ணீர் தேக்கப்பட்டு வந்த 8 ஆயிரத்து 530 ஏக்கரில் சில அதிகாரிகள், பிரமுகர்கள் 3 ஆயிரத்து 500 ஏக்கரை ஆக்கிரமிப்பு செய்து, ஐந்து மாவட்டங்களில் 38 ஆயிரம் ஏக்கர் நிலங்களை தரிசாக்கி விட்டனர்.
28 ஆயிரம் ஏக்கர் இருபோக நிலங்கள் ஒரு போகமாக மாறிவிட்டன. மேலும் 53 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் பாசன வசதி தடைபட்டுள்ளது.
ஆண்டுதோறும் 55 கோடி ரூபாய்க்கு விவசாய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மின் உற்பத்தியில் 75 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பெரியாறு அணை அருகே புதிதாக அணை கட்டுவதற்கான ஆய்வு நடத்த மத்திய அரசு அனுமதி கொடுத்தது கண்டிக்கத்தக்கது.
குறிப்பிட்ட இடத்தில் நடத்திய ஆய்வில் அணை கட்ட வாய்ப்பு இல்லாததால், மாற்று இடத்தில் அணை கட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கேரளா அரசுக்கு புதிய அணை கட்டுவது நோக்கமல்ல. இதை காரணமாக வைத்துக் கொண்டு, பெரியாறு அணையை எப்படியாவது உடைக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம்.
அணையை உடைக்க கேரளா அரசு முயற்சி செய்தால், தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு பால் உட்பட ஒரு துரும்பு கூட செல்ல முடியாது. எங்கள் எதிர்கால சந்ததி வாழ பெரியாறு அணை பாதுகாக்கப்பட வேண்டும்.
இதற்காக அரசியலுக்கு அப்பாற்பட்டு, நான் ஐந்து மாவட்டங்களிலும் கிராமம் கிராமமாக சென்று மக்களை திரட்டுவேன். இது எனது கடமை.
அணையை உடைத்த பின் போராடுவதால் எவ்வித நன்மையும் கிடைக்காது. வருமுன் காக்க இந்த போராட்டங்களில் ஈடுபடுகிறோம். பிப்ரவரி 9ல் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.
மத்திய அரசு ஒருமைப்பாட்டை விரும்புவதாக இருந்தால், புதிய அணை கட்டும் கேரளாவின் முயற்சியை தடுக்க வேண்டும்' என்றார்.












Click it and Unblock the Notifications