ஜனநாயகத்தை பிழைக்க விடுவாரா ராஜபக்சே?-வென்ற முதல் நாளே ராணுவத்தை ஏவியதால் சந்தேகம்!
கொழும்பு: 2வது முறையாக அதிபர் தேர்தலில் வென்ற முதல் நாளே, தன்னை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியுற்ற பொன்சேகாவை வெளியில் கூட வர முடியாத அளவுக்கு ராணுவத்தை வைத்து அதிரடியாக முடக்கிப் போட்டு விட்ட ராஜபக்சே இலங்கையில் அடுத்து நடத்தப் போவது ஜனநாயக ஆட்சியா அல்லது சர்வாதிகார ஆட்சியா என்ற பெரும் கவலையில் இலங்கை மூழ்கியுள்ளது.
நிச்சயம் சிங்கள மக்களே கூட ராஜபக்சேவின் இந்த அதிரடி மிலிட்டரி அட்டாக்கை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். தன்னை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியுற்ற வேட்பாளரை வெளியில் நடமாட முடியாமல் கிட்டத்தட்ட 15 மணி நேரத்திற்கும் மேல் ஹோட்டலுக்குள்ளேய முடக்கிப் போட்டு விட்டார் ராஜபக்சே.
இது ராஜபக்சேவின் 2வது பதவிக்காலம் சர்வாதிகார ஆட்சியாக இருக்குமோ என்ற அச்சத்தையும், சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
கிட்டத்தட்ட பாகிஸ்தானின் முஷாரப் போல நடக்க ஆரம்பித்துள்ளார் ராஜபக்சே என்று தெரிகிறது.
முஷாரப்பும் இப்படித்தான் தனது ஆட்சிக்காலத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களை அடக்கி, ஒடுக்கி, சுருட்டி, சூறையாடினார்.
நவாஸ் ஷெரீப் பல ஆண்டுகளுக்குப் பிறகு நாடு திரும்பியபோது நாட்டுக்குள் காலடி எடுத்து வைக்கக் கூட அனுமதிக்காமல் விமான நிலையத்தோடு நிறுத்தி அப்படியே நாடு கடத்தினார்.
மேலும், எதிர்க்கட்சித் தலைவர்கள் சுதந்திரமாக நடமாட விடாமல் பல வகைகளிலும் தடுத்தார்.
நேற்று ராஜபக்சே அரசு நடந்து கொண்ட விதமும் அதே போலத்தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் புலிகளுக்கு எதிரான போரை வென்ற நாயகன் என சிங்கள மக்களால் பெருமையுடன் கூறப்படும் பொன்சேகாவையே முடக்கிப் போட்டு விட்ட ராஜபக்சேவால் ரணில் விக்கிரமசிங்கே உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் எந்த மூலைக்கு என்ற கேள்வியும் எழுகிறது.
பொன்சேகாவை முடக்கிப் போட்டதன் மூலம் அத்தனை அரசியல் எதிரிகளுக்கும் ராஜபக்சே ஸ்டிராங்கான மெசேஜைக் கொடுத்துள்ளது போலவே தெரிகிறது.
அமைதியாக அனுசரித்துப் போனால் அன்பு காட்டுவேன், ஆட்டம் காட்டினால் அட்டாக் என்ற ரீதியில் உள்ளது ராஜபக்சேவின் செயல் என்று இலங்கையிலிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
தன்னைக் கொல்ல ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார் என்று பொன்சேகா கூறியிருப்பதை, தோற்றவரின் புலம்பல் என்று ஒதுக்கித் தள்ளி விட முடியாது. காரணம், ராஜபக்சேவின் கடந்த ஆட்சிக்காலத்தி்ல் எத்தனையோ படுகொலைகள் நடந்துள்ளன. கொல்லப்பட்டவர்களில் பலரும் ராஜபக்சேவுக்கு எதிராக செயல்பட்டவர்கள். சிங்களப் பத்திரிக்கையாளர் லசந்தா அதில் முக்கியமானவர்.
எனவே பொன்சேகாவின் குற்றச்சாட்டு பல்வேறு சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. ஹோட்டலுக்குள் பொன்சேகா ஆதரவு ராணுவத்தினர் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியுள்ளனர். அவர்கள் எங்களைத் தாக்க முயற்சித்தார்கள். எனவே பதிலுக்குத் தாக்கினோம். அதில் 'அசம்பாவிதம்' நடந்து விட்டது என்ற ரீதியில் திட்டம் ஏதேனும் இருந்ததோ என்ற சந்தேகங்களும் இலங்கையில் கிளம்பத் தொடங்கியுள்ளன.
இவையெல்லாவற்றையும் விட தமிழர்களுக்கு தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை ராஜபக்சே நிறைவேற்றுவாரா, தமிழர்கள் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்ப வகை செய்வாரா, ஜனநாயகத்தை தழைத்தோங்கச் செய்வாரா, ஒன்றிணைந்த இலங்கையில் தமிழர்களும், சம மரியாதையுடன், கெளரவத்துடன் வாழ வழி செய்வாரா என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் வரிசை கட்டி நிற்க ஆரம்பித்துள்ளன.
ஆனால் ராஜபக்சே 'புத்தர்' ஆவாரா அல்லது 'முஷாரப்' ஆவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ராஜபக்சேவுக்கு பிரதீபா, மன்மோகன் வாழ்த்து:
இந் நிலையில் இலங்கை அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ள ராஜபக்சேவுக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ராஜபக்சேவுக்கு பிரதீபா அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில்,
தேர்தலில் வெற்றி பெற்றதற்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் தலைமையில் இலங்கை அனைத்து துறைகளிலும் முன்னேறும் என்றும், நாட்டில் பூரண அமைதி நிலவும் என்றும் நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
வெற்றிச் செய்தி கிடைத்ததும் ராஜபக்சேவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மன்மோகன் சிங்,
உங்கள் தலைமையில் இலங்கையில் பூரண அமைதி ஏற்பட்டு, அனைத்து சமூகத்தினரும் இணக்கத்துடனும், மரியாதையுடனும் வாழ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நம்புவதாக குறிப்பிட்டாராம்.
தமிழர்களுக்கு விரைவில் அரசியல் திட்டம்-ராஜபக்சே:
இந் நிலையில் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக, அவர்களின் குறைகளைத் தீர்க்கும் விதமாக புதிய திட்டம் விரைவில் அறிவிக்கப்படும் என்று மகிந்தா ராஜபக்சே கூறியுள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், நாட்டில் பிறப்பிக்கப்பட்ட அவசரகால சட்டம் தளர்த்தப்படும். அதேசமயம் இதை மெதுவாகவே செய்யத் திட்டமிட்டுள்ளோம்.
அதேபோல தமிழ் மக்களுக்கென விரைவில் அரசியல் திட்டம் ஒன்று அறிவிக்கப்படும். நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த பின்னர், தமிழர் தலைவர்களுடன் கலந்து பேசி இந்தத் திட்டம் அறிவிக்கப்படும்.
நிச்சயம் அரசியல் திட்டம் அறிவிக்கப்படும். இதுகுறித்து எனது தேர்தல் அறிக்கையிலேயே சொல்லியுள்ளேன். அதிலேயே அது உள்ளது. எனவே நான் என்ன செய்யப் போகிறேன் என்பதை முன்பே திட்டமிட்டுத்தான் செய்து வருகிறேன் என்றார் ராஜபக்சே.
தமிழர்கள் உங்களுக்கு வாக்களிக்காமல் புறக்கணித்து விட்டார்களே என்ற கேள்விக்கு ராஜபக்சே நேரடியாகப் பதிலளிக்கவில்லை. மாறாக, பல ஆண்டுகளாக ஓட்டுப் போட முடியாமல் தவித்து வந்த மக்கள் முதல் முறையாக சுதந்திரமாக வாக்களித்துள்ளார்கள். அது சந்தோஷமான விஷயம்தானே என்று மழுப்பலாக பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications