உட்கட்சி மோதல் - ஓ.எஸ்.மணியன் தாக்கப்பட்டார்
வேதாரண்யம்: நாகை மாவட்ட அதிமுக செயலாளராக நேற்று கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில், அதிமுக எம்.பியான ஓ.எஸ். மணியனை அதிமுககாரர்களே தாக்கி காயப்படுத்தி விட்டனர்.
அதிமுக புதிய நிர்வாகிகள் பட்டியலை நேற்றுதான் கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டார். இதில், நாகை மாவட்ட அதிமுக செயலாளராக ஓ.எஸ்.மணியன் அறிவிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு வேதாரண்யம் அருகே ஓ.எஸ்.மணியன் தாக்கப்பட்டார். அவரைத் தாக்கியது அதிமுகவினர் எனக் கூறப்படுகிறது. உட்கட்சி மோதலால் இந்த தாக்குத்ல நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
வேதாரண்யம் அருகே நடந்த அதிமுக தொண்டர் ஒருவரது இல்லத் திருமண விழாவுக்குப் போய்க் கொண்டிருந்தபோது மணியன் தாக்கப்பட்டார்.
இதையடுத்து இரவு 9 மணிக்கு அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஏன் அடி...?
ஒன்றியச் செயலாளர் பதவியைப் பிடிப்பது தொடர்பாக மணியனின் ஆதரவாளரான முன்னாள் எம்.எல்.ஏ ராதா என்பவருக்கும், பழனியப்பன் என்பவருக்கும் இடையே போட்டி நிலவியது.
இதில் ராதாவுக்குப் பதவி கிடைத்து விட்டது. இதனால் பழனியப்பன் ஆத்திரமடைந்தார். இதுவே மணியன் தாக்கப்பட்டதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை தொகுதியில் கடந்த முறை நடந்த தேர்தலில் மணிசங்கர அய்யரை வீழ்த்தி எம்.பி. ஆனவர் மணியன் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications