ஒகேனக்கல் திட்டம்: முதல் கட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு
சென்னை: ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கான முதல் கட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு வழங்கி ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பு:
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சார்ந்த 3 நகராட்சிகள், 17 பேரூராட்சிகள் மற்றும் 18 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 6755 ஊரக குடியிருப்புகளில் உபயோகிக்கப்படும் குடிநீரில் புளோரைடு உப்புகளின் சதவிகிதம் ஒரு லிட்டர் குடிநீரில், 1.5 மில்லிகிராம் முதல் 12.4 மில்லிகிராம் உள்ளதாக, குடிநீர் மாதிரிகளின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
மத்திய பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் நிறுவனத்தின் கையேட்டின்படி வரையறுக்கப்பட்ட புளோரைடு அளவு ஒரு லிட்டர் குடிநீருக்கு 1.5 மி.கி.மட்டுமே.
ஆனால், பல ஆண்டு காலமாக இந்த 2 மாவட்டங்களில் புளோரைடு அதிகம் கலந்த குடிநீர் பருகிவருவதால், இந்த மாவட்டங்களில் உள்ள மக்கள் மூட்டு, முதுகெலும்பு, கைகால் வளைதல், முடக்குவாதம் போன்ற நோய்களாலும், பற்கள் காவியாதல் மற்றும் எலும்பு தொடர்பில்லாத பல்வேறு நோய்களாலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும், இந்த 2 மாவட்டங்களும் வறட்சியினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் ஆகும். கோடை காலங்களில் இந்த மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு பெருமளவில் ஏற்படுகிறது. எனவே, புளோரோசிஸ் பாதிப்பில் இருந்து தடுக்கும் வகையிலும், நிலையான மற்றும் நீடித்த குடிநீர் இப்பகுதி மக்களுக்கு வழங்கும் வகையிலும், 1928 கோடியே 80 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்திட தமிழக அரசு முடிவு செய்து உள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் இந்த 2 மாவட்டங்களிலுள்ள சுமார் 30 லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள். இந்த திட்டத்தை செவ்வனே செயல்படுத்திடும் வகையில் 5 கட்டங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது.
கட்டம் ஒன்றில் நீர் உள்வாங்கும் கட்டமைப்பு, இயல்பு நீர் உந்து அறை, இயல்நீர் இறைப்பான், இயல்பு நீர் உந்துகுழாய், நாள் ஒன்றுக்கு 156 மில்லியன் லிட்டர் திறனுடைய நீர் சுத்திகரிப்பு நிலையம், சுத்திகரிக்கப்பட்ட நீர் கடத்தும் குழாய், நீர் உந்து நிலையம், 240 லட்சம் லிட்டர் கொள்ளவுள்ள நீர்த்தேக்க தொட்டி, மின்னணு தகவல் பரிமாற்றம் குறிப்பு சேகரித்தல் போன்ற பணிகளை உள் அடக்கியதாக உள்ளது.
முன் தகுதிக்கான தேர்வு தொழில்நுட்பம் மற்றும் நிதி தொடர்பான மதிப்பாய்வு முடிந்து கட்டம் ஒன்றுக்கான பணி உத்தரவு 237 கோடியே 18 லட்சம் ரூபாய்க்கு ஐ.வி.ஆர்.சி.எல்.இன்ப்ராஸ்ட்ரக்சர் என்ற ஐதராபாத் நிறுவனத்துக்கு 28.1.2010 அன்று வழங்கப்பட்டது. பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications