என்னை சிறைக்கு அனுப்பவும், கோத்தபயா, பசிலை கொல்லவும் துடித்த எதிர்க்கட்சியினர் - ராஜபக்சே

நேற்று மாலை அதிபர் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் ராஜபக்சே. அப்போது இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுக்களை பொன்சேகா சுமத்தியிருப்பது குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு ராஜபக்சே பதிலளிக்கையில், அவை குறித்து சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். சட்டம் தனது கடமையைச் செய்யும். இதற்கு மேல் போக நான் விரும்பவில்லை.
கொல்லத் துடித்தனர்...
எனது நாற்பது ஆண்டு கால அரசியல் சேவையில், இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான முறையில் பிரசாரத்தில் ஈடுபட்டனர் எதிர்க்கட்சியினர்.
என்னை போகம்பராவுக்கு அனுப்பத் துடித்தனர் (போகம்பரா என்பது இலங்கையின் 2வது மிகப் பெரிய சிறைச்சாலை. வெள்ளையர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த மிகப் பெரிய சிறைச்சாலை, கண்டியில் உள்ளது. மிகுந்த பாதுகாப்புடன் கூடிய இரும்புக் கோட்டை என வர்ணிக்கப்படுவதாகும்).
கோத்தபயாவை சுட்டுக் கொல்லத் திட்டமிட்டனர். பசில் ராஜபக்சேவை தீயிட்டுக் கொளுத்தத் துடித்தனர். எல்லாம் ஆட்சியைப் பிடித்து அதிகாரப் பசியைத் தீர்த்துக் கொள்வதற்காக.
அவர்களுக்கு மட்டும் வாய்ப்பு கிடைத்திருந்தால் நிச்சயம் இதைச் செய்திருப்பார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன்
நாடாளுமன்றம் எப்போது கலைப்பு..
ரஷ்யா வருமாறு எனக்கு அந்த நாட்டு அரசு அழைப்பு விடுத்துள்ளது. ரஷ்யா செல்வதற்கு முன்பு நாடாளுமன்றம் கலைக்கப்படும்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தேர்தல் நடந்ததும், அங்கு வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களித்ததும் ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றியாகும். அங்கு அரசுக்கும், எதிர்கட்சிகளுக்குமாக வாக்குகள் பிரிந்திருந்தாலும் கூட அது வரவேற்கப்படக் கூடிய ஒன்றுதான்.
வடக்கில் நான் வெற்றி பெறவில்லை என்றாலும் கூட, மக்கள் ஜனநாயக முறைக்குள் நுழைய அங்கு வாய்ப்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சி தருகிறது. நீண்ட காலத்திற்குப் பிறகு சுதந்திரமாக மக்கள் வாக்களித்துள்ளனர். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இரு தரப்புக்குமே மக்கள் வாக்களித்துள்ளனற்.
போர் முடிந்து ஒன்பது மாதங்கள்தான் ஆகின்றன. எனவே பழைய புண் ஆற கால அவகாசம் தேவைப்படும். வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் மக்களுக்கு என்னால் எதைத் தர முடியுமோ அதைத் தருவேன். இந்த இடத்தில், பிரிவினைவாத விதைகளைத் தூவும் முயற்சியில் மீடியாக்கள் ஈடுபடக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.
கடந்த 1987-88 ஆண்டின்போது கைது செய்யப்பட்ட ஜனதா விமுக்தி பெரமுனாவினரை விடுதலை செய்ய அப்போதைய ஐக்கிய தேசிய கட்சி 3 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. ஆனால் எனது அரசு விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்பட்டவர்களை ஆறு மாதங்களுக்குள் விடுவித்துள்ளது என்றார் ராஜபக்சே.












Click it and Unblock the Notifications