கடத்தல் மிரட்டல்-சென்னை விமான நிலையத்தில் உயர்ந்தபட்ச பாதுகாப்பு
சென்னை: விமானத்தைக் கடத்தப் போவதாக வந்த மர்ம தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து சென்னை விமானத்தில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தினத்தையொட்டி, தீவிரவாதிகளால் விமானம் கடத்தப்படும் அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து, நாடு முழுவதிலும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.
அதேபோல, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
கடந்த 17-ந்தேதி முதல் விமான நிலையத்திற்குள் பார்வையாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடை நாளை வரை நீடிக்கிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10-30 மணிக்கு விமான நிலையத்தில் உள்ள குடியுரிமை துறை அதிகாரி அபி பிரகாசுக்கு ஒரு மர்ம போன் வந்தது.
அதில் பேசிய நபர், சென்னையில் இருந்து புறப்படும் ஏர்-இந்தியா விமானத்தை கடத்தப்போவதாவும், முடிந்தால் தடுத்துக்கொள்ளுங்கள் என்றும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டான்.
இந்த தகவல் பரவியதும் விமான நிலைய அதிகாரிகள் மத்தியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகளின் அவசர கூட்டம் நடந்தது.
இதில் விமான நிலைய ஆணையக அதிகாரிகள், மத்திய தொழிற்பாதுகாப்பு படை அதிகாரிகள், விமான நிறுவன பாதுகாப்பு படையினர், புறநகர் போலீசார் ஆகியோர் கலந்து கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதித்தனர்.
கூட்டத்தில், விமான நிலையத்தில் பாதுகாப்பை உடனடியாக அதிகரிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, சென்னை விமான நிலையத்தில் உச்சக்கட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. விமான நிலையத்தில் ஏற்கனவே 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அது 9 அடுக்கு பாதுகாப்பாக உயர்த்தப்பட்டது. 9 நுழைவு வாயில்களிலும் பயணிகளை தீவிரமாக பரிசோதிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் 727 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். நேற்று இரவு பணி முடிந்து திரும்பிய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மீண்டும் உடனடியாக பணிக்கு திரும்ப அழைக்கப்பட்டனர்.
விமான கடத்தல் மிரட்டலை தொடர்ந்து, விமான நிலையம் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. விமான நிலையத்தின் அனைத்து பகுதியிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார், அதிவிரைவு படையினர் ரோந்து சுற்றி வருகின்றனர். விமான நிலைய மாடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பைனாகுலர் கருவியுடன் கண்காணித்து வருகின்றனர்.
அரசு விமான போக்குவரத்து நிறுவனத்தை சேர்ந்த விமானத்தை கடத்தப்போவதாக மிரட்டல் வந்ததால் அந்த விமானங்களில் செல்லும் பயணிகளிடம் கூடுதல் சோதனை நடத்தப்படுகிறது. முக்கிய பிரமுகர்கள் உள்பட அனைத்து பயணிகளும் கூடுதல் சோதனைக்கு பின்னரே விமானத்தில் ஏற அனுமதிக்கப்படுகின்றனர்.
போலீஸ் படையினர், விமான நிலையத்திற்கு வரும் அனைத்து வாகனங்களையும் நுழைவுவாயில் பகுதியில் தடுத்து நிறுத்தி சோதனை போட்ட பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கிறார்கள்.
வருகை, புறப்பாடு பகுதிக்கு அருகே செல்ல எந்த வாகனமும் அனுமதிக்கப்படுவது இல்லை. முக்கிய பிரமுகர்கள் கூட சற்று தொலைவில் காரை விட்டு இறங்கி நடந்தே செல்கிறார்கள்.
தண்டவாளத்தில் கம்பி-பயணிகள் தப்பினர்:
இதற்கிடையே, தண்டவாளத்தின் குறுக்கே 11 அடி நீள இரும்பு கம்பியை வைத்து, கொல்லம்-மதுரை பயணிகள் ரயிலை கவிழ்க்க முயற்சி நடந்தது. டிரைவரின் சாமர்த்தியத்தால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
கேரள மாநிலம், கொல்லத்தில் இருந்து நாகர்கோவில் வழியாக மதுரை செல்லும், கொல்லம்-மதுரை பயணிகள் ரயில், நாகர்கோவில் ரயில் நிலையத்துக்கு இரவு 10.20 மணிக்கு வந்து, பயணிகளை ஏற்றிக்கொண்டு 10.40 மணிக்கு புறப்பட்டு செல்வது வழக்கம்.
நேற்று முன்தினம் இரவு இந்த ரயில் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்துக்கு நள்ளிரவு 11.05 மணிக்கு வந்து கொண்டு இருந்தது.
அப்போது முன்பக்கத்தில் இருந்து பயங்கர சத்தம் கேட்டது. ஏறத்தாழ ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை இந்த சத்தம் கேட்டதால் உஷாரான டிரைவர் ரயிலை நிறுத்திவிட்டு கீழே இறங்கிச் சென்று பார்த்தார்.
அப்போது என்ஜினின் முன்புறத்தில் தண்டவாளத்தில் உள்ள தடைகளை அகற்றும் தடுப்பு பகுதியில் 11 அடி நீள பெரிய இரும்புக் கம்பி சிக்கி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அந்த கம்பியை என்ஜின் தள்ளிக்கொண்டே சென்றதால்தான் சத்தம் கேட்டுள்ளது.
ரயில்களை கவிழ்ப்பதற்காக, மர்ம மனிதர்கள் அந்த இரும்புக் கம்பியை தண்டவாளத்தின் குறுக்கே போட்டுவிட்டு சென்று இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால், டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டு ரயிலை நிறுத்தியதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
இதனால் ரயிலில் இருந்த 800க்கும் மேற்பட்ட பயணிகள் நிம்மதியடைந்தனர்.
நாகர்கோவில் ரயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். தண்டவாளத்தில் 11 அடி நீள இரும்பு கம்பியை போட்டு ரயிலை கவிழ்க்க சதி நடந்து இருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications