மலேசியாவில் தைப்பூசம்: பட்டுக் குகை கோவிலில் 10 லட்சம் பக்தர்கள் திரண்டனர்-பிரதமர் வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

கோலாலம்பூர்: மலேசியாவில் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பட்டுக் குகை முருகன் கோவிலில் பத்து லட்சம் பக்தர்கள் திரண்டனர்.

தைப்பூசத்தையொட்டி மலேசியா வாழ் தமிழர்களுக்கு பிரதமர் நஜீப் துன் ரஸ்ஸாக் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தைப்பூசத்தையொட்டி அங்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் போலவே மிகவும் பிரமாண்டமாகவும், மிகச் சிறந்த முறையிலும் மலேசியா வாழ் தமிழர்கள் தைப்பூசத்தை கொண்டாடுவது வழக்கம். குறிப்பாக பட்டுக் குகை ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவிலில் மிகச் சிறந்த முறையில் தைப்பூசம் கொண்டாடப்படும்.

அதன்படி தைப்பூச தினமான இன்று பட்டுக் குகை முருகன் கோவிலில் பத்து லட்சம் பக்தர்கள் திரண்டனர்.

காலையிலிருந்து கடும் வெயில் அடித்து வந்த போதிலும் அதைப் பொருட்படுத்தாமல் பல்வேறு வகையான காவடிகளை ஏந்தியபடி அலை அலையாக பக்தர்கள் முருகன் கோவிலுக்கு சாரை சாரையாக வந்தனர். பால் குடங்கள் எடுத்தும், தேங்காய்களை உடைத்தும், மொட்டை போட்டும் முருகப் பெருமானின் பிறந்த நாளாம் தைப்பூசத்தைக் கொண்டாடினர்.

கோவில் விழாக் கமிட்டி உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், பத்தாயிரம் பக்தர்கள் இந்த ஆண்டு காவடி எடுத்தும், பால் குடம் ஏந்தியும் வந்தனர். ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் விழாவைக் காண குழுமியுள்ளனர்.

பக்தர்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பு வசதிகள் இந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மொட்டை போடுவோரின் வசதிக்காக சிறிய அரங்கம் கட்டப்பட்டுள்ளது. புதிய நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

கடந்த முறை தைப்பூசத்தின்போது பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விட்டது. ஆனால் இந்த ஆண்டு போக்குவரத்து உரிய முறையில் கட்டுப்படுத்தப்பட்டு சீரான போக்குவரத்துக்கு வழி செய்யப்பட்டிருப்பதால் பக்தர்களுக்கு எந்தவித அசவுகரியமும் ஏற்படவில்லை.

தைப்பூசத் திருநாளைக் காண வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பிரமாண்ட முருகன் சிலையையும், பக்தர்கள் ஏந்தி வந்த விதம் விதமான காவடிகளையும், அலகு குத்தி வந்ததையும் பார்த்து வியந்து போனார்கள்.

ஜேம்ஸ் டக்கர் என்ற ஆஸ்திரேலிய பயணி கூறுகையில், இது மிகவும் வியப்பாக இருக்கிறது. இவ்வளவு சிறப்பான விழாவை எங்கும் நான் கண்டதில்லை. அலகு குத்தி வருவது மெய் சிலிர்க்க வைத்துள்ளது என்றார்.

இபோவில்..

இதேபோல இபோவில் அருள்மிகு சுப்ரமணியர் கோவிலில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் திரண்டு வந்து தைப்பூசத்தைக் கொண்டாடினர்.

அதேபோல சுங்கை பாரி பகுதியில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

பினாங்கில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் தமிழர்கள், ஜலன் கேபுன் பங்கா பகுதியில் உள்ள கோவில்களில் திரண்டு தைப்பூசத்தைக் கொண்டாடினர்.

பினாங்கு இந்து அறநிலையத்துறை துணைத் தலைவர் ஆர்.எஸ்.என். ராயர் கூறுகையில், 200க்கும் மேற்பட்டோர் காவடிகள் எடுத்தும், தேங்காய் உடைத்தும், பால் குடம் ஏந்தியும் வந்து நேர்த்திக் கடனை செலுத்தினர்.

பக்தர்கள் வசதிக்காக சாலையோரங்களில் 137 தண்ணீர்ப் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன என்றார்.

பிரதமர் நஜீப் வாழ்த்து...

தைப்பூசத்தையொட்டி மலேசியப் பிரதமர் நஜீப் தமிழர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், பிற சமுதாயத்தினரின் பாரம்பரியங்கள், கலாச்சாரங்களை அறிந்து கொள்ளும் ஆர்வம் உடையவர்களுக்கு தைப்பூசத் திருவிழா மிகச் சிறந்த ஒரு விழாவாக அமைந்துள்ளது. இந்தத் திருநாளின் பெருமைகளை அறிந்து கொள்வதன் மூலம் பல விஷயங்களை நாம் கற்றுக் கொள்ள முடிகிறது.

அனைத்து மலேசியர்களுக்கும் மலேசியாவின் கலாச்சார வளத்தை பாராட்டக் கிடைத்துள்ள இன்னும் ஒரு வாய்ப்பாக தைப்பூசம் அமைந்துள்ளது.

இந்த கண்கவர், பாரம்பரியத் திருவிழாவைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் ஒற்றுமையுடனும், ஒருமைப்பாட்டுடனும் தைப்பூசத் திருநாளைக் கொண்டாட வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார் நஜீப்.

கோவிலுக்கு வந்த மலேசியப் பிரதமர் ..

முன்னதாக பட்டுக் குகை முருகன் கோவிலில் நேற்று நடந்த தைப்பூசத்தையொட்டிய விழாவில், பிரதமர் நஜீப் கலந்து கொண்டார். மலேசியப் பிரதமர் ஒருவர் பட்டுக் குகை சுப்ரமணியர் கோவில் தைப்பூசக் கொண்டாட்டத்தில் பங்கேற்பது இது 2வது முறையாகும்.

இதற்கு முன்பு நஜீப்பின் தந்தை அப்துல் ரஸ்ஸாக் ஹூசேன் பிரதமராக இருந்தபோது இங்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விழாவில் மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவர் டத்தோ சாமிவேலு உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் சாமிவேலு பேசுகையில், இந்திய சமுதாயத்தினருக்கு பிரதமர் நஜீப் புது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார். வம்சாவளி இந்தியர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அவர் வகுத்து வருகிறார்.

இந்திய சமுதாயத்தினர் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியு்ளார். இதற்கு நன்றி கூறும் வகையில் இந்தியர்கள் அவருக்கு முழு ஆதரவாக இருப்பார்கள்.

பட்டுக் குகை சுப்ரமணியர் சுவாமி கோவிலுக்கு வந்திருப்பதன் மூலம் ஒரே மலேசியா என்ற கொள்கைக்கு அவர் வலு ஏற்படுத்தியுள்ளார். புதிய சகாப்தத்தை தொடங்கியுள்ளார்.

இந்தியர்கள் அனைத்துத் துறைகளிலும் முன்னேற அரசின் ஆதரவு நிச்சயம் தேவை. அதை நஜீப் கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் சாமிவேலு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+