மர்மக் காய்ச்சலை ஒழிக்காததைக் கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மர்மக் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மக்கள் ஆட்படுத்தப்பட்டதற்குக் காரணமான தி.மு.க. அரசைக் கண்டித்தும், உடனடியாக கொசுக்களை ஒழிக்கவும், பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்கவும் மர்மக் காய்ச்சலை தடுத்து நிறுத்தவும் நடவடிக்கை எடுக்க வலியறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை:

கடந்த சில மாதங்களாக சென்னையில் கொசுக்களின் உற்பத்தி வெகுவாக அதிகரித்துள்ளது. தற்போது அதிகரித்து வரும் கொசுத் தொல்லையால் இறுதித் தேர்வை சந்திக்க இருக்கின்ற மாணவ-மாணவியர்களின் கல்வி வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது. அதிலும் மின் தடை ஏற்பட்டு விட்டால், அவர்கள் படும் துன்பம் சொல்லி மாளாது.

சென்னையில் உள்ள சாலையோர கடைகள், பூங்காக்கள் எல்லாமே கொசுக்களின் பிடியில்தான் தவிக்கின்றன. கொசுக்களின் தொல்லை காரணமாக வாகன ஓட்டிகளும், பாத சாரிகளும் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

கொசுக்களின் ஆதிக்கம் காரணமாக, மர்மக்காய்ச்சல் ஏற்பட்டு, சென்னை நகரில் மட்டும் குறிப்பாக வட சென்னை மாவட்டத்தில் தற்போது ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நோயால் பாதிக்கப்படும் ஏழை, எளிய மக்கள் மாதக் கணக்கில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருப்பதாகவும், இதன் காரணமாக அவர்களுடைய அன்றாட வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்றும் தகவல்கள் வருகின்றன.

சென்னை நகர் முழுவதும் ஆங்காங்கே கழிவு நீர் தேங்கியுள்ளதும் குடிநீருடன் கழிவு நீர் கலப்பதும், கொசுக்களை ஒழிக்கவும், மக்களுக்குத் தேவையான சுகாதார பாதுகாப்பினை அளிக்கவும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கவும் தி.மு.க. அரசு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காதது தான் இதற்கு முக்கிய காரணம் என்று பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

மர்மக் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மக்கள் ஆட்படுத்தப்பட்டதற்குக் காரணமான தி.மு.க. அரசைக் கண்டித்தும், உடனடியாக கொசுக்களை ஒழிக்கவும், பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்கவும் மர்மக் காய்ச்சலை தடுத்து நிறுத்தவும் நடவடிக்கை எடுக்க வலியறுத்தி வட சென்னை மாவட்டக்கழகத்தின் சார்பில் 2-ந்தேதி காலை 9.30 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையிலும் வட சென்னை மாவட்டக்கழக செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ. முன்னிலையிலும் நடைபெறும் என்று கூறியுள்ளார்.

பாம்பாறு அணைக்கு எதிர்ப்பு

இதேபோல ஜெயலலிதா விடுத்துள்ள இன்னொரு அறிக்கை..

பாம்பாற்றின் குறுக்கே கோவில்கடவு பகுதியில், கேரள நீர்மின் திட்டத்திற்காக புதிய அணை கட்ட சமீபத்தில் கேரள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கேரள அரசின் இந்தத் திட்டம் அனுமதிக்கப்பட்டால், திருப்பூர், கரூர் மாவட்டங்களில் அமராவதி அணையை நம்பி உள்ள 70 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் இல்லாத சூழ்நிலை ஏற்படும்.

நூற்றுக்கணக்கான கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கேரள எல்லையில் உருவாகும் பாம்பாறு, தமிழக பகுதியில் இருந்து உருவாகும் தேனாறு, சின்னாறு மற்றும் காட்டாறு ஆகியவற்றின் மூலம் அமராவதி அணைக்கு நீர் வருகிறது.

பாம்பாற்றின் குறுக்கே கேரள அரசு புதிய அணையை கட்டினால், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் விவசாய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படுவதோடு, குடிநீர் பற்றாக்குறையும் ஏற்படும்.

காவேரி நதிநீர் ஆணையத்தின் இறுதித் தீர்ப்பில், பாம்பாறு படுகையிலிருந்து கேரளாவிற்கு 3 டி.எம்.சி. தண்ணீர் தரப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வந்த பிறகு, கேரளாவிற்கு அதிகமாக தரப்பட்டுள்ள நீரை தமிழகத்தின் கணக்கில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அ.தி.மு.க சார்பில் வலியுறுத்தப்பட்டது.

தமிழக பொதுப்பணித் துறையின் புள்ளி விவரப்படி, விவசாயத்திற்கு 17.65 டி.எம்.சி. தண்ணீரும், தொழிற்சாலைகளுக்கு 0.492 டி.எம்.சி. தண்ணீரும், அமராவதி முதல் கரூர் வரை உள்ள மக்களின் குடிநீர்த் தேவைக்கு 0.514 டி.எம்.சி. தண்ணீரும் தேவைப்படுகிறது.

இந்த பிரச்னை தொடர்பாக நடுவர் மன்றத்தை அணுகலாமா என்பது குறித்து ஆலோசித்து வருவதாக சட்டப் பேரவையில் 2007ம் ஆண்டு தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை நடுவர் மன்றத்தை அணுக எந்த விதமான நடவடிக்கையையும் அரசு எடுத்ததாகத் தெரியவில்லை.

கேரள அரசு, காவேரி நடுவர் மன்றத் தீர்ப்பினை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, தற்போது பாம்பாற்றின் குறுக்கே கோவில்கடவு அருகில் புதிய அணையை கட்ட முடிவு செய்துள்ளது.

எனவே, பாம்பாற்றின் குறுக்கே புதிய அணை கட்டப்படுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காத தமிழக அரசைக் கண்டித்து நாளை மாலை 3 மணியளவில், உடுமலைப்பேட்டை மத்திய பேருந்து நிலையம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டம், கழக தேர்தல் பிரிவுச் செயலாளர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் எம்.எல்.ஏ. தலைமையிலும், திருப்பூர் மாவட்டக் கழகச் செயலாளர் சி.சிவசாமி எம்.பி., மற்றும் மாவட்ட அவைத் தலைவர் சி.சண்முகவேலு எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+