உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: புதிய தமிழகம் கிருஷ்ணசாமி சார்பில் கோவையில் உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு நடத்த தடை விதித்த கோவை ஆணையரின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
மேலும், டாக்டர் கிருஷ்ணசாமி மீண்டும் அனுமதி கோரி மனு அளிக்குமாறும், அதை பரிசீலிக்குமாறு காவல்துறை ஆணையருக்கும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையில் பிப்ரவரி 6 மற்றும் 7ம் தேதிகளில் உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டை நடத்தை புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி திட்டமிட்டுள்ளார்.
இந்த மாநாட்டை நடத்துவதற்கு அனுமதி கேட்டு கோவை போலீஸ் கமிஷனர் மற்றும் துணை கமிஷனர் ஆகியோரிடம் டாக்டர் கிருஷ்ணசாமி விண்ணப்பித்தார்.
ஆனால், அந்த விண்ணப்பம் தகுந்த காரணமின்றி தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், மாநாடு நடத்த அனுமதி அளிக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரி உயர்நீதிமன்றத்தில் கிருஷ்ணசாமி மனுத் தாக்கல் செய்தார்.
உயர்நீதிமன்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் முன்னிலையில் இம்மனு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி நேற்று பிறப்பித்த உத்தரவில்,
'மாநாட்டுக்கு அனுமதி கேட்டு கிருஷ்ணசாமி கொடுத்திருந்த விண்ணப்பத்தை தள்ளுபடி செய்து காவல்துறை துணை ஆணையர் கடந்த 19ம் தேதி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
ஆனால், அதற்கு முன்பு மனுதாரர் தரப்பில் விளக்கம் கேட்ப்படவில்லை. எனவே ஆணையரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
மனுதாரர் மீண்டும் அனுமதி கேட்டு பிப்ரவரி 1ம் தேதி மதியம் 12 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.
மாநாடு தொடர்பாக உரிய விளக்கங்கள் கேட்பதற்கும், ஆவணங்களை கொடுப்பதற்கும் துணை ஆணையர் வாய்ப்பு கொடுக்க வேண்டும். அதன்பிறகு தகுந்த ஆலோசனை நடத்தி மாநாட்டுக்கு அனுமதி கொடுப்பது பற்றி பரிசீலிக்க வேண்டும்.
பிப்ரவரி 3ம் தேதிக்குள் மனுதாரரின் விண்ணப்பத்தின் மீது துணை ஆணையர் முடிவு செய்து அறிவிக்க வேண்டும். அதுபோல் கோவை காவல்துறை ஆணையருக்கும் இந்த உத்தரவு பொருந்தும்' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications