ஷாருக்கைத் தொடர்ந்து ஆமிரையும் வாரும் சிவசேனா- இருவரையும் 2 இடியட்ஸ் என விமர்சனம்
மும்பை: ஐபிஎல் போட்டிகளில் பாகிஸ்தான் வீரர்களையும் சேர்த்திருக்க வேண்டும் என ஷாருக் கான் கூறியதைக் கடுமையாக கண்டித்து, அவரை விமர்சித்த பால் தாக்கரேவின் சிவசேனா கட்சி தற்போது ஆமிர் கானையும் வம்புக்கு இழுத்துள்ளது.
ஷாருக் கான், ஆமிர் கான் ஆகிய இருவரும் 2 இடியட்ஸ் எனவும் அது கடுமையாக விமர்சித்துள்ளது. ஆமிர்கான் நடித்த 3 இடியட்ஸ் பட தலைப்பை பயன்படுத்தி இருவரையும் சிவசேனா விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அக்கட்சியின் இந்தி பத்திரிக்கையான டோபாஹர் கா சாம்னாவில் கட்சித் தலைவர் பால் தாக்கரே எழுதியுள்ள கட்டுரையில், நிஜ வாழ்க்கையில் ஆமிர்கானும், ஷாருக் கானும் 2 இடியட்ஸ்கள் என்பதை நிரூபித்துள்ளனர். இருவருமே பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தொடர்பாக முட்டாள்தனமான கருத்துக்களைத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.
ஒரு பக்கம், பாகிஸ்தான் வீரர்கள் மீதான தனது அன்பை பகிரங்கமாக பொழிகிறார் ஷாருக் கான். இதே விவகாரத்தில் தனது தேசப்பற்றை வெளிக்காட்டும் விதமாக பேசுவதாக காட்டிக் கொள்கிறார் ஆமிர் கான்.
ஆமிர்கானைப் பொறுத்தவரை, எந்த வீரர் சிறப்பாக விளையாடினாலும், அவரது நாடு குறித்துக் கவலைப்படாமல் அணியில் சேர்த்துக் கொள்வாராம் என்று விமர்சித்துள்ளது சிவசேனா.
மேலும், 3 இடியட்ஸ் பட விளம்பரப் படத்தை எடுத்து அதில் ஆமிர், ஷாருக் கான் படங்களை மார்ஃப் செய்து கிண்டலும் அடித்துள்ளது சிவசேனா.
நேற்று முன்தினம் ஆமிர்கான் பேசுகையில், ஐபிஎல் அணி வீரர்களை நான் தேர்வு செய்ய நியமிக்கப்பட்டிருந்தால், வீரர்களின் நாடு குறித்துக் கவலைப்படாமல் திறமையை மட்டும் கருத்தில் கொண்டு செயல்பட்டிருப்பேன் என்று கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
சிவசேனாவின் தொடர் தாக்குதல்கள் குறித்து இதுவரை ஷாருக் கானும், ஆமிர் கானும் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.












Click it and Unblock the Notifications