கோவையில் தலித்களைத் தடுத்த தீண்டாமைச் சுவர் இடிப்பு

இதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளாக கோவையின் அவமானச் சின்னமாக நின்று கொண்டிருந்த இந்த சுவர் தகர்ந்து, தலித்களுக்கு விடுதலை கிடைத்துள்ளது.
கோவை நகரின் முக்கியப் பகுதிகளி்ல் ஒன்று ஜீவா நகர். இதற்கு அருகில் உள்ளது பெரியார் நகர். இந்த இரு பகுதிகளுக்கும் அருகில் உள்ள முக்கியமான காமராஜர் சாலை.
காமராஜர் சாலைக்கு பெரியார் நகரைச் சேர்ந்தவர்கள் வர வேண்டும் என்ரால் ஜீவா நகர் வழியாக வருவதுதான் சுருக்கமான பாதையாகும். இல்லாவிட்டால் சுற்றிக் கொண்டு சாலையை அடைய வேண்டும்.
இந்த நிலையில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஜீவா நகரைச் சேர்ந்தவர்கள், அங்குள்ள மாநகராட்சி இடத்தில், ஒரு விநாயகர் கோவிலைக் கட்டினார்கள். பின்னர் அதற்கு அருகில் பெரியார் நகர் தலித் மக்கள் வர முடியாத அளவுக்கு ஆறு அடிக்கு 3 அடி என்ற கணக்கில் தடுப்புச் சுவரையும் கட்டி விட்டனர்.
இதனால் பெரியார் நகர் ஆதி திராவிடர் காலனியில் வசித்து வரும் 58 குடும்பங்களைச் சேர்ந்தவர்களால் ஜீவா நகர் வழியாக வர முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த சுவரை இடிக்கக் கோரி பல விதங்களில் போராடி வந்தனர் பெரியார் நகர் மக்கள்.
இந்த நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் பி.உமாநாத்துக்கு தலித் மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவைப் பார்த்த ஆட்சித் தலைவர் அந்த சுவரை இடித்துத் தள்ளுமாறு மாநகராட்சி ஆணையர், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் அங்கு சென்று சம்பந்தப்பட்ட சுவரை இடித்துத் தள்ளினர். இதன் மூலம் பெரியார் நகர் தலித் மக்கள் ஜீவா நகர் வழியாக செல்ல இருந்து வந்த தடை விலகியது.
ஏற்கனவே மதுரை மாவட்டம் உத்தப்புரம் கிராமத்தில் பல வருடங்களாக தலித் மக்களையும், இன்னொரு பிரிவு மக்களையும் பிரிக்கும் வகையில் இருந்து வந்த நீண்ட சுவரின் ஒரு பகுதியை சில மாதங்களுக்கு முன்பு போலீஸார் இடித்துத் தள்ளினர் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications