உயர் மட்ட அதிகாரிகள் பொறுப்புடன் செயல்பட பிரதமர் வேண்டுகோள்
டெல்லி: வறுமை, படிப்பறிவின்மை மற்றும் நோய் போன்றவற்றை நாட்டில் இருந்து முற்றிலும் ஒழிக்க வேண்டிய மாபெரும் கடமைகளை தோளில் சுமக்கும் உயர்மட்ட அதிகாரிகள் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார்.
மாநிலங்களின் தலைமைச் செயலர்களுக்கான முதல் வருடாந்திர மாநாடு டெல்லியில் இன்று தொடங்கியது.
இரண்டு நாள் நடைபெறும் இம்மாநாட்டை பிரதமர் மன்மோகன் சிங் துவக்கி வைத்தார்.
அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலர்கள் மற்றும் அதிகாரிகள் மாநாட்டில் கலந்துகொண்டனர்.
மாநாட்டை துவக்கி வைத்து பிரதமர் பேசியதாவது:
கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களின் மூலம் உலகின் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது.
நாட்டு மக்களுக்கு தரமான வாழ்க்கை அளிக்கவும், பசி, நோய் மற்றும் வறுமை எதிர்கொள்ளவும் முன் எப்போதும் இல்லாத வலிமையுடன் நாம் இருக்கிறோம்.
இந்தியர்களின் திறமையை உலகமே அங்கீகரித்து வரும் இந்த சூழலில் சர்வதேச பொருளாதாரத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம்.
எனினும் நம்முன் சில புதிய சவால்கள் இருக்கின்றன. நாட்டின் நிர்வாக இயந்திரத்தின் மூலம் வழங்கும் சேவைகள் எவ்வளவு விரைவாக நடக்கிறது என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.
சேவைகள் விரைவாக வந்து சேரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உள்ளது. அதோடு ஊழல், மெத்தனம், முறைகேடு போன்றவை அரசாங்கத்தின் தளத்தில் இருந்தாலும் அதை மக்கள் வெறுக்கிறார்கள்.
முன் எப்போதையும் விட இன்றைய சூழலில் மக்களுக்கு இவற்றின் மீதான வெறுப்பு அதிகளவில் காணப்படுகிறது.
மக்கள் பிரதிநிதிகளின் சபைகள், நீதித்துறை, அரசு இயந்திரம் மற்றும் மீடியா என எல்லாமும் மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.
வேகமான பொருளாதார வளர்ச்சி என்பது நாட்டின் அடித்தட்டு மக்களையும், விவசாயிகளையும், மாணவர்களையும், பெண்களையும் சென்று சேர வேண்டும். இல்லையெனில் வளர்ச்சி என்பது அர்த்தமற்றதாகி விடும்.
அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பது நமது பொருளாதார மேம்பாட்டின் நோக்கமாக இருக்க முடியும்.
இதன் அடிப்படையில் தான் தேசிய ஊரக வளர்ச்சி திட்டம் போன்ற பல புதிய திட்டங்களை மத்திய அரசு வகுத்து செயல்படுத்தி வருகிறது.
நமது நோக்கம் நிறைவேற வேண்டுமானால், அர்ப்பணிப்பு உணர்வுடன், நேர்மையாகவும், கடமைப்பொறுப்புடனும் அவற்றை அமல்படுத்த வேண்டியுள்ளது.
அதேபோல பாதுகாப்பு விஷயத்திலும் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. தலைமைச் செயலாளர்கள் மாநில விவகாரங்களில் மட்டும் அக்கறை செலுத்துவது போதாது.
எல்லை தாண்டிய விவகாரங்கள், தேசிய விவகாரங்களையும் தெரிந்திருந்தால் தான் தீவிரவாதம், ஊடுருவல் போன்ற சவால்களை வெற்றிகரமாக சமாளி்க்க முடியும்.
பருவநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய பிரச்னைகளை சமாளிக்க இந்தியா எட்டு நாடுகளுடன் சேர்ந்து கூட்டு செயல்திட்டத்தை வகுத்துள்ளது.
அதை மாநில அளவில் வெற்றிகரமாக செயல்படுத்துவதிலும் மாநில நிர்வாகங்களின் ஒத்துழைப்பு அவசியாமகிறது.
ஒரு நாட்டின் மேம்பாடு என்பது தலைமைப் பொறுப்புகளை ஏற்று நிர்வகிக்கும் அதிகாரிகள் எந்தளவுக்கு செயல்படுகிறார்களோ அதைப் பொறுத்துத்தான் அமைகிறது.
இந்தவகையில், வறுமை, படிப்பறிவின்மை மற்றும் நோய் போன்றவற்றை நாட்டில் இருந்து முற்றிலும் ஒழிக்க வேண்டிய மாபெரும் கடமைகளை நீங்கள் உங்கள் தோள்களில் சுமந்திருக்கிறீர்கள்' என்றார்.












Click it and Unblock the Notifications