மராத்தியர் விவகாரம்: பாஜக-சிவசேனா கூட்டணி 'டமார்'?

சிவசேனாவில் இருந்து பிரிந்து சென்ற ராஜ் தாக்கரே தனது நவநி்ர்மாண் சேனாவினரை விட்டு வட இந்தியர்களைத் தாக்கி இனப் பிரச்சனையைத் தூண்டிவிட்டு, அதன்மூலம் வாக்குகளை அள்ளி, கடந்த மக்களவை, சட்டமன்றத் தேர்தல்களில் சிவசேனாவுக்கு பெரும் தோல்வி ஏற்படச் செய்தார்.
இதையடுத்து ராஜ் தாக்கரேவைவிட அதிகமாக மராட்டிய இனப் பற்றைக் காட்டியாக வேண்டிய நிலைக்கு சிவசேனா தலைவர் பால் தாக்கரே தள்ளப்பட்டுள்ளார்.
இதனால் சமீப காலமாக வட இந்தியர்களுக்கு எதிராக தீவிரமான கருத்துக்களை, தேச விரோத கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் பால் தாக்கரேவும் அவரது மகன் உத்தவ் தாக்கரேயும்.
சமீபகாலமாக இவர்களது தாக்குதலுக்கு சச்சின், ஷாருக் என யாருமே தப்பவில்லை. இதையடுத்து நாடு முழுவதுமே பால் தாக்கரே கும்பலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
தாக்கரேவுடன் இனியும் சவகாசம் வைத்துக் கொண்டால் வட இந்தியாவில் ஓட்டு வாங்குவது கஷ்டம் என்பதை பாஜகவும் ஆர்எஸ்எஸ்சும் உணர்ந்துவிட்டன. இதையடுத்து அவரை கூட்டணியில் இருந்து வெட்டி விடும் முடிவுக்கு பாஜகவும் அதன் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்சும் வந்துவிட்டன.
அதே போல பாஜகவுடன் கூட்டணி சேர்ந்திருப்பதால் தனக்கும் இனி எந்த லாபமும் இல்லை என தாக்கரேயும் நினைக்கிறார். இதனால் இந்த 20 வருடக் கூட்டணி விரைவிலேயே முடிவுக்கு வரும் என்று தெரிகிறது.
இந்த விவகாரத்தில் பாஜகவை விட ஆர்எஸ்எஸ் தான் தாக்கரே மீது அதிக கோபத்தில் உள்ளது.
சமீபத்தில் மும்பை விவகாரத்தில் அரசியல் நடத்த வேண்டாம் என்று ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு சிவசேனை செயல் தலைவர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்ததை அவர்கள் ரசிக்கவில்லை.
தேச பக்தியைப் பற்றியும் நாட்டு ஒற்றுமையைப் பற்றியும் எங்களுக்கு ஆர்எஸ்எஸ் கற்றுத் தர வேண்டியதில்லை என்று கூறியுள்ள உத்தவ், 1992ம் ஆண்டு நடைபெற்ற ஹிந்து-முஸ்லிம் கலவரத்தின்போது ஹிந்துக்கள் அனைவரையும் சிவசேனை தான் காப்பாற்றியது. அப்போது ஆர்எஸ்எஸ் அமைப்பு எங்கே சென்றது என்று அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும் மகாராஷ்டிர-கர்நாடக எல்லைப் பகுதியில் பல மராத்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அதுகுறித்து எந்த கருத்தையும் ஆர்எஸ்எஸ் தெரிவிக்காதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தங்கள் வீக் பாயிண்டுகளை எதிர்க் கட்சிகளுக்குப் பதில், தனது கூட்டணி்க் கட்சியே கிளப்புவதை ஆர்எஸ்எஸ் அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டுள்ளது.
இதனால் உறவை முறிக்குமாறு பாஜகவிடம் ஆர்எஸ்எஸ் கூறிவிட்டது.
பாஜக-சிவசேனா கூட்டணிக்கு வித்திட்டவர் மறைந்த பாஜக தலைவர் பிரமோத் மகாஜன் தான். ஆனால், அப்போதே அதை நிதின் கட்காரி உள்ளிட்டோர் எதிர்த்தனர். இப்போது பாஜக தலைவராகிவிட்ட கட்காரி, இந்தக் கூட்டணிக்கு முடிவு கட்டிவிட முடிவு செய்துள்ளார்.
அவர் கூறுகையில், சிவசேனா இந்திய கட்சி போல செயல்படவில்லை. காஷ்மீர் தீவிரவாதிகள் போல செயல்படுகிறது என்று கூறி பிரச்சனையை மேலும் சிக்கலாக்கியுள்ளார்.
அதே நேரத்தில் சிவசேனாவுடனான கூட்டணி தொடர வேண்டும் என்று மகாஜனின் மச்சானும் பாஜக தேசியச் செயலாளருமான முண்டே கூறியுள்ளார். மகாராஷ்டிரத்தில் மராட்டியர்களுக்கு முன்னுரிமை கோருவதில் தவறில்லை என்று கூறி பாஜகவிலேயே கருத்துப் பிளவை ஏற்படுத்தியுள்ளார் முண்டே.












Click it and Unblock the Notifications