'நேரடி வரி'- பாஜக கடும் எதிர்ப்பு
டெல்லி: மத்திய அரசின் உத்தேச நேரடி வரி விதிப்பு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாஜக தலைவர்கள் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியை நேரடியாகச் சந்தித்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
இந்த வரி விதிப்பு முறைக்கு பாஜக ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறது என்பதையும் அவர்கள் விளக்கினர்.
பாஜக தலைவர்களின் கருத்துகளைக் கேட்ட நிதியமைச்சர் பிரணாப், தற்போது உத்தேச வரி விதிப்பு முறையானது பரிந்துரை அளவிலேயே உள்ளது. இதை அமல்படுத்துவதற்கு முன்பு பாஜகவினர் தரும் கருத்துகளை, ஆலோசனைகளை ஏற்று பின்னர் அமல்படுத்துவதாகவும் உறுதி கூறினார்.
2011-12-ம் நிதி ஆண்டுக்கு முன்னதாக உத்தேச வரி விதிப்பு குறித்து எந்த முடிவும் எடுக்கப்படாது, என்று பிரணாப் முகர்ஜி உறுதி அளித்ததாகவும் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் சுஷ்மா ஸ்வராஜ் கூறினார்.
நாட்டில் ஒழுங்காக வரி செலுத்தும் 90 சதவீதத்தினர் சிறிய அளவில் வரி செலுத்துவர், சிறு வணிகர்கள்தான். அவர்களைப் பாதிக்கும் வகையில் இதில் புதிய வழிகாட்டுதல்கள் உள்ளன, என்று அருண் ஜேட்லி குறிப்பிட்டார்.
நாட்டின் பொருளாதாரமே பொதுமக்களின் சேமிப்பை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் உத்தேச வரி விதிப்பு முறையோ சேமிக்கும் பழக்கத்தையே சிதைப்பதாக உள்ளது. வரி விலக்கு பெறும் முறையிலிருந்து வரி விதிப்புக்குள்ளாகும் முறை அமல்படுத்தப்பட உள்ளது தெளிவாகப் புரிகிறது. மூத்த குடிமக்களை இது நிச்சயமாகப் பாதிக்கும். கல்வி நிறுவனங்கள், அறக்கட்டளைகளுக்கு வரி விதிப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. எனவேதான் இந்த வரி முறையை பாஜக எதிர்ப்பதாக பாஜக தெரிவித்துள்ளது.
பிரணாபைச் சந்தித்த இந்தக் குழுவில், எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி, துணைத் தலைவர் எஸ்.எஸ். அலுவாலியா, பாஜக நேரடி வரி விதிப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் கிரித் சோமையா, பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆனந்த் குமார் ஹெக்டே, நிஷாகாந்த் துபே, கோபால் அகர்வால் ஆகியோர் அடங்கியிருந்தனர்.
இந்த உத்தேச வரிமுறையை வடிவமைத்தவர் முன்பு நிதியமைச்சர் பொறுப்பிலிருந்த ப சிதம்பரம். அதையே இப்போது பிரணாப் முகர்ஜி அறிமுகப்படுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications