அரசியல் விவகாரங்கள்-பிப்-20ல் கூடுகிறது திமுக செயற்குழு
சென்னை: பிப்ரவரி 20ம் தேதி திமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
திமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் பிப்ரவரி 20ம் தேதி நடைபெறும். இக் கூட்டத்தில் அரசியல் விவகாரங்கள், பெண்ணாகரம் இடைத்தேர்தல் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படும்.
கோவையில் நடக்கவிருக்கும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் நடைபெறும் ஆய்வரங்கத்தில் கலந்து கொள்ள 4,625 பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 426 பேர் வெளிநாட்டவர்கள்.
இதுவரையிலும் 3,420 பேர் ஆய்வுக் கட்டுரைகளுக்காக பதிவு செய்துள்ளனர். அமெரிக்கா, ஜெர்மன், இத்தாலி, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, மொரீஷிசியஸ், ரஷ்யா, நார்வே, நியூசிலாந்து உள்ளிட்ட 48 நாடுகளை சேர்ந்த அறிஞர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கின்றனர். இவர்களைத் தவிர இந்தியாவை சேர்ந்த 4,161 பேர் பங்கேற்கின்றனர்.
மார்ச் மாதம் 13ம் தேதி சட்டப் பேரவையின் புதிய கட்டிட திறப்பு விழாவிற்கு பிரதமரும், சோனியா காந்தி, தமிழக கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலாலும் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களும் பங்கேற்பதாக ஒப்புதல் அளித்துள்ளனர்.
கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் இன்னும் அமலுக்கு வரவில்லை. ஆனாலும் எதிர்கட்சிகள் அதை வைத்துக் கொண்டு அரசியல் செய்கின்றன. மத்திய அரசு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை கொண்டு வராமல் இருக்க தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் செய்யும். அதையும் மீறி அந்த சட்டத்தைக் கொண்டு வந்தால் அதை திமுக எதிர்க்கும் என்றார் கருணாநிதி.
பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்:
கேள்வி: இலங்கையில் தேர்தல் முடிந்துவிட்டது. அங்கு தமிழர்களை மறுகுடியமர்த்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து உங்களுக்கு தகவல் வந்துள்ளதா?
பதில்: நடைபெறவுள்ள திமுக பொதுக் குழுவில் இதை வலியுறுத்த இருக்கிறோம். இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு உரிய அதிகாரப் பகிர்வுக்கு ஏற்கனவே அளிக்கப்பட்ட உறுதிமொழியினை இலங்கை அரசு நிறைவேற்றிட முன் வரவேண்டும் என்று வலியுறுத்தியும், இதற்கான செயல்களில் மத்திய அரசு ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டும் இந்த பொதுக்குழுவில் விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற இருக்கிறோம்.
கேள்வி: வேறு என்னென்ன விஷயங்கள் பொதுக்குழுவில் விவாதிக்கப்படும்?
பதில்: அரசியல் நிலவரங்கள், தேவைப்பட்டால் பெண்ணாகரம் இடைத் தேர்தல் குறித்து விவாதிக்கப்படும்.
கேள்வி: மும்பையில் மராட்டிய மொழி பேசுபவர்கள் மட்டுமே வாழ முடியும் என்ற பிரச்சாரம் நடைபெறுகிறதே..
பதில்: அவர்களின் கருத்துக்கு மராட்டியத்திலேயே ஆதரவு இருப்பதாகத் தெரியவில்லை.
கேள்வி: தென் மாநிலங்களிலும் இந்தி எதிர்ப்பு என்ற பெயரில் இப்படிப்பட்ட நிலை இருப்பதாக தாக்கரே தெரிவித்திருக்கிறாரே?
பதில்: தென் மாநிலங்களில் மற்ற மொழிகாரர்களை மாநில எல்லைகளை விட்டு விரட்டுவதோ, இங்கு உங்களுக்கு இடமில்லை என்று சொல்வதோ இல்லை. இது போன்ற குறுகிய மனப்பான்மை கொண்ட எந்த அரசியல் கட்சியும் இங்கு இல்லை.
கேள்வி: திமுக பொதுக்குழுவில் கட்சியில் ஏதாவது மாற்றம் செய்யப்படுமா?
பதில்: கட்சி பெயரில் மாற்றம் எதுவும் செய்யப்படாது. அது அப்படியேதான் இருக்கும். (சிரிக்கிறார்)
கேள்வி: காஞ்சிபுரம் திமுக மாநாட்டில் இலங்கைத் தமிழ் அகதிகள் குடியுரிமை தொடர்பாக மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினீர்களே?. அதற்கு ஏதாவது பதில் உண்டா?.
பதில்: தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளோம். பரிசீலிப்பதாக சொல்லியிருக்கிறார்கள்.
கேள்வி: மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தமிழில் கேள்வி கேட்டால் பதிலளிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறாரே?
பதில்: அப்படிப்பட்ட சூழல் அங்கு இருந்திருக்கலாம். வேற்று மொழிக்காரர்கள், அதாவது ஆங்கிலம், இந்தி மட்டுமே தெரிந்தவர்கள் இருந்த அந்த சூழ்நிலையில் அவர் அப்படி பதிலளித்திருக்கலாம்.
கேள்வி: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் உங்களை சந்தித்தபோது என்ன பேசினீர்கள்?
பதில்: கடலோர பாதுகாப்பு போன்ற பிரச்சனைகள் குறித்து இருவரும் கலந்து பேசினோம். ராணுவத்தாலும், அந்நாட்டு மீனவர்களாலும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்த என் கவலையையும், கண்டனத்தையும் அவரிடம் தெரிவித்தேன்.
இலங்கை தமிழர்களுக்கு உரிமை களை பகிர்ந்தளிக்கும் வகையில் அரசியல் திருத்தம் கொண்டு வருவது தொடர்பாகவும் அவருடன் நான் வலியுறுத்திப் பேசினேன்.
கேள்வி: மீண்டும் நீங்களே முதல்வராக தொடர்வீர்கள் என மத்திய அமைச்சர் அழகிரி கூறியுள்ளாரே?
பதில்: இந்த விஷயத்தில் எனது கருத்தை சொல்ல வேண்டிய நேரத்தில், சொல்ல வேண்டிய இடத்தில் அறிவிப்பேன்.
கேள்வி: டெல்லியில் சோனியா- ஜெயலலிதா சந்திப்பு பற்றி...?
பதில்: தேர்தல் கமிஷன் வைர விழாவில் சோனியா-ஜெயலலிதா பேசிக் கொண்டது குறித்து நீங்களாக என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பாக முடியாது என்றார் கருணாநிதி.
கருணாநிதிக்கு யுஎஸ் காங்கிரஸ் மகா சபை விருது:
இந் நிலையில் முதல்வர் கருணாநிதியை நியூயார்க் தமிழ்ச் சங்கச் செயலாளர் பிரகாஷ் சுவாமி சந்தித்தார். இதையடுத்து நிருபர்களிடம் பேசிய அவர்,
உலக தமிழ்செம்மொழி மாநாட்டில் அமெரிக்காவில் இருந்து 100 பிரதிநிதிகள் பங்கேற்பார்கள். அப்போது மாநாட்டில் முதல்வர் கருணாநிதிக்கு அமெரிக்க காங்கிரஸ் மகாசபை விருது வழங்கப்படும்.
இந்தியர் ஒருவருக்கு இந்த உயரிய விருது வழங்கப்படுவது இதுவே முதல் முறை என்றார்.












Click it and Unblock the Notifications