பொன்சேகாவின் இரு மகள்களும் இலங்கையை விட்டு வெளியேறினர்
கொழும்பு: சரத் பொன்சேகாவின் இரு மகள்களும் இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளனர்.
அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த பொன்சேகாவுக்கு அபர்ணா மற்றும் அப்சரா என இரு மகள்கள் உள்ளனர்.
தேர்தலுக்குப் பின் பொன்சேகாவின் நிலை மிகவும் சிக்கலாகியுள்ளது. அவர் மீது ராஜபக்சே அரசு கொலைச் சதிப் பழியை சுமத்தியுள்ளது. இதனால் எந்த நேரமும் அவர் கைதாகும் நிலை காணப்படுகிறது.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அவரது இரு மகள்களும் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளனராம். இருவரும் அமெரிக்காவுக்குப் போயுள்ளதாக கூறப்படுகிறது.
இருவரும் கட்டுநாயக்கா விமான நிலையம் சென்றபோது எந்தவித தடங்கலும் ஏற்படுத்தப்படாமல் வெளியேற அனுமதிக்கப்பட்டனராம்.
அரசியல் பயணம் தொடரும்: பொன்சேகா
இதற்கிடையே, தன் மீது எந்த வகையான நெருக்குதல்கள் திணிக்கப்பட்டாலும் எனது அரசியல் பயணம் தொடரும் என பொன்சேகா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் எனக்கு ஆதரவாக வாக்களித்த காரணத்தினால் அரசாங்கம் இனவாதத்தை தூண்டும் வகையிலான பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது.
எனது அலுவலகத்தில் பணியாற்றிய அனைவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
எந்தவிதமான சூழ்ச்சித் திட்டத்தையும் நான் னாமேற்கொள்ளவில்லை. மக்கள் விரும்பிய ஜனாதிபதி நான்தான் என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications