குடிபெயர்ந்த தொழிலாளர் நலன்: தமிழக அரசு புதிய முயற்சி
சென்னை: வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களுக்கு குடிபெயர்ந்த தொழிலாளர்களின் சமூக-பொருளாதார நலன்களை பாதுகாக்க தமிழக தொழிலாளர் ஆணையத்தில் தனி பிரிவு உருவாக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு விரைவில் இறுதி முடிவெடுக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் இருந்து குடிபெயர்ந்த தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்னைகள் தொடர்பான கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது.
தமிழக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை இந்த கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது.
சமூகவியல் ஆய்வாளர்கள், புலம் பெயர்ந்தோர் நல அமைப்புகள் மற்றும் தொழிலாளர் துறை அதிகாரிகள் பலர் இதில் கலந்துகொண்டனர்.
திருவனந்தபுரத்தில் உள்ள வளர்கல்வி மையத்தின் சர்வதேச குடிபெயர்வு ஆராய்ச்சிப் பிரிவின் பேராசிரியர் இருதயராஜன் கருத்தரங்கில் பேசுகையில்,
'கடந்த 2006-08ம் ஆண்டு காலத்தில் தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்த தொழிலாளர்களின் மூலம் இங்குள்ள அவர்களின் குடும்பத்திற்கு அனுப்பப்பட்ட பணம் ரூ.41 ஆயிரத்து 400 கோடியை தாண்டியுள்ளது.
இந்த வகையில் தமிழகத்திற்கு அடுத்தபடியாக கேரளா உள்ளது. தமிழகத்தில் பிளம்பர், வெல்டர் போன்ற பணிகளுக்கு ஆட்கள் கிடைக்க வில்லை என்றால் அதற்கு காரணம் தொழிலாளர்களின் புலம்பெயர்வு தான் என்பது சமூகவியலாளர்களின் கருத்து.
குறிப்பாக தமிழகத்தில் இருந்து இதுபோன்ற ஏராளமான திறன்மிக்க தொழிலாளர்கள் வளைகுடா நாடுகளுக்கு படையெடுத்த வண்ணம் இருக்கிறார்கள்.
அவ்வாறு வெளிநாடுகளுக்கு அல்லது வெளிமாநிலங்களுக்கு குடிபெயர்ந்த பணியாளர்களின் சமூக-பொருளாதார நிலைமை எப்படி இருக்கிறது என்பது குறித்து தெரிந்துகொள்ள நமது அரசுகளிடம் எவ்வித வசதியும் செய்யப்படவில்லை.
சமீபத்தில் ஏற்பட்ட சர்வதேச நிதி நெருக்கடி காலத்தில் வெளிநாடுகளில் பணியாற்றிய இந்தியர்களில் அதிகம் பாதிப்புக்கு உள்ளானவர்கள் தமிழர்களும், ஆந்திராவைச் சேர்ந்தவர்களும் தான் என பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கேரளாவில் இருந்து குடிபெயர்ந்தவர்கள் அதிமாகவே இருந்தனர். ஆனால் நெருக்கடி காலத்துக்கு முந்தைய நேரத்தில் குடிபெயர்ந்தோர் தாய்மண் திரும்புவதற்கான புணரமைப்பு திட்டத்தை கேரள அரசு உருவாக்கியது.
அதன்மூலம் கேரள மக்கள் பலர் மாநிலம் திரும்பி பயன்பெற்றனர். ஆனால் தமிழக அரசு அதுபோன்ற திட்டம் எதையும் மேற்கொள்ளவில்லை' என குறிப்பிட்டார்.
அருணோதயா அமைப்பைச் சேர்ந்த பெர்னார்ட் டிசாமி கூறுகையில், 'தமிழ்நாட்டில் இருந்து வெளியேறிச் செல்லும் பணியாளர்கள் பெரும்பாலும் அபாயகரமான, உத்தரவாதமில்லாத பணிகளில் தான் அதிகளவில் ஈடுபடுகின்றனர்.
குறிப்பாக தமிழகத்தில் இருந்து செல்லும் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் திறன் குறைந்த, பலவீனமான பணியாளர்களாக இருக்கின்றனர்.
இதுவே அவர்கள் சிக்கலில் மாட்ட காரணமாக அமைகிறது' என்றார்.
தொழிலாளர் நலத் துறை அதிகாரிகள் கூறுகையில், 'குடிபெயர்ந்த தொழிலாளர்கள் நலனுக்காக தமிழக அரசின் தொழிலாளர் ஆணையத்தில் தனி பிரிவை உருவாக்க வேண்டும் என இந்த கருத்தரங்கின் மூலம் தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்கான திட்ட முன்வடிவும் தயாரிக்கப்பட்டு உள்ளது. எனினும் இதுகுறித்து இறுதி முடிவெடுக்க வேண்டியது தமிழக அரசு தான்' என்றனர்.












Click it and Unblock the Notifications