கேரளாவின் புதிய அணையை எதிர்க்கவில்லை- ஆனால் அணை எங்களிடம் இருக்க வேண்டும்: தமிழ்நாடு

Subscribe to Oneindia Tamil

Mullaperiyar Dam
டெல்லி: கேரள அரசு முல்லைப் பெரியாறின் குறுக்கே புதிய அணை கட்ட நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் அந்த அணையின் பொறுப்பு எங்களிடமே இருக்க வேண்டும் என்று தமிழக அரசு வழக்கறிஞர் உச்சநீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் முன்பு வாதிட்டுள்ளார்.

இது தமிழகத்தில் புதிய புயலைக் கிளப்பும் என தெரிகிறது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தாமல் தடுக்கும் வகையில் கேரள அரசு இயற்றிய சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது தமிழக அரசு.

இதுதொடர்பான வழக்கை தற்போது டி.கே.ஜெயின் தலைமையிலான அரசியல் சாசன பெஞ்ச் விசாரித்து வருகிறது. இதுதொடர்பான வாதம் நேற்று வந்தபோது தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.பராசரன் கூறுகையில்,

கேரள அரசு கட்டத் திட்டமிட்டுள்ள புதிய அணையின் பொறுப்பை எங்களிடமே விட்டு விட கேரள அரசு ஒப்புக் கொண்டால் அந்த அணையை அனுமதிக்க தமிழகத்திற்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. மேலும், அதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தையும் நாங்கள் கேரளாவுடன் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கிறோம் என்றார்.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஏன் இதை நடுவர் மன்றத்திற்கு விடக் கூடாது என்று நீதிபதிகள் கேட்டிருந்தனர். அதற்குப் பதிலளித்த தமிழக அரசு வழக்கறிஞர், இது இரு மாநிலங்களுக்கு இடையிலான நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினை கிடையாது. மாறாக, நூறாண்டுகளைத் தாண்டி விட்ட முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்ட அளவை உயர்த்துவது தொடர்பான பிரச்சினை மட்டுமே என்று வாதிட்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்றைய விவாதத்தின்போது புதிய அணை கட்ட ஆட்சேபனை இல்லை, ஆனால் அதன் கட்டுப்பாடு தமிழகத்திடமே இருக்க வேண்டும் என தமிழகத்தின் தரப்பில் கருத்து வைக்கப்பட்டிருப்பது புதிய திருப்பமாக கருதப்படுகிறது.

தமிழக அரசின் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதோ என்ற கேள்வியும் எழுகிறது.

கேரளா புதிய அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என்பதே தமிழகத்தில் உள்ள அனைத்து முக்கிய கட்சிகள் மற்றும் ஐந்து தென் மாவட்ட விவசாயிகளின் ஒரே கோரிக்கையாக உள்ள நிலையில் புதிய அணை கட்டலாம், ஆனால் கட்டுப்பாடு தமிழகத்திடம் இருக்க வேண்டும் என்ற வாதத்தை தமிழக அரசு எடுத்து வைத்திருப்பது தமிழகத்தில் புயலைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+