செங்கல்பட்டு: ஈழ அகதிகள் மீது போலீஸ் தாக்குதல்- பழ.நெடுமாறன் கண்டனம்

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
'செங்கல்பட்டில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள 31 ஈழத்தமிழ் அகதிகள் மீது நேற்று இரவு 10 மணிக்கு மேல் காவல்துறையினர் மிகக் கடுமையான தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.
இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். தங்கள் குறைகளைத் தீர்ப்பதாக முதல்வர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, நேற்று அந்தக் கைதிகள் அனைவரும் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்கள்.
ஆனால் இரவு 10 மணிக்கு மேல் திடீரென 200க்கும் மேற்பட்ட போலீசார் உள்ளே புகுந்து உறங்கிக் கொண்டிருந்த அகதிகள் மீது மிகக்கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளார்கள்.
மிகவும் மோசமான முறையில் பாதிக்கப்பட்டுள்ள 13 அகதிகளை மட்டும், அங்கிருந்து காவல்துறை அகற்றிவிட்டனர். அவர்கள் கதி என்னவாயிற்று என்பதும் தெரியவில்லை.
முதல்வர் கருணாநிதியின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை, உண்ணாவிரதம் இருந்த அகதிகள் மீது நடத்திய தாக்குதல் முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுப்படுத்தியிருக்கிறது.
படுகாயமடைந்த அனைத்து அகதிகளையும் உடனடியாக விடுதலை செய்வதோடு அவர்களை மருத்துவமனையில் சேர்த்து தக்க சிகிச்சையளிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications