பாம்பன் பாலத்தில் 'மக்கரான' ரயில்- பயணிகள் பீதி!
மண்டபம்: திருச்சியிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் பாம்பன் பாலத்தை கடக்கும் போது திடீரென என்ஜின் பழுதானதால் பயணிகள் பீதியடைந்தனர்.
திருச்சி-ராமேஸ்வரம் பயணிகள் ரயில் திருச்சியிலிருந்து நேற்று புறப்பட்டு மண்டபத்திற்கு மதியம் 12.30 மணிக்கு வந்தது. அங்கிருந்து ராமேஸ்வரம் செல்வதற்காக புறப்பட்டது.
அப்போது ரயில், பாம்பன் பாலத்தில் நுழைந்த போது ரயில் என்ஜினில் திடீரென பழுது ஏற்பட்டது. இதனால் ரயில் பாலத்தை கடக்க முடியாததால் அங்கேயே நிறுத்தப்பட்டது.
ரயில் கடல் பகுதியில் நிறுத்தப்பட்டதால் அதில் இருந்த பயணிகள் கடும் அச்சம் அடைந்தனர். அச்சம் காரணமாக, சிலர் ரயிலில் இருந்து பாலத்தில் இறங்கி ரயில் நிலையம் செல்ல முயன்றனர்.
தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள் ராமேஸ்வரத்தில் இருந்து மாற்று என்ஜினை, பிற்பகல் 2.45 மணிக்கு கொண்டுவந்தனர்.
ரயிலை பின்னோக்கி இயக்கி மண்டபம் கொண்டு சென்றனர்.
அங்கு, மாற்று என்ஜின் பொருத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரயில் அங்கிருந்து, 3.45 மணிக்கு புறப்பட்டு ராமேஸ்வரம் சென்றது.
ராமேஸ்வரத்திற்கு பிற்பகல் 1.15 மணிக்கு செல்ல வேண்டிய ரயில், மூன்று மணி நேரம் காலதாமதமாக 4.15 மணிக்கு சென்றது.
அங்கிருந்து பிற்பகல் 2.05 மணிக்கு புறப்பட வேண்டிய இந்த ரயில், மாலை 4.30 மணிக்கு திருச்சி புறப்பட்டு சென்றது.
மாலை 5 மணிக்கு புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் - மதுரை பாசஞ்சர் ரயில், என்ஜின் இல்லாததால், இரவு 7 மணிக்கு புறப்பட்டு சென்றது.












Click it and Unblock the Notifications