இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு தள்ளி வைப்பு-ஏப்ரலில் பென்னாகரம் தேர்தலுக்கு வாய்ப்பு
சென்னை: பென்னாகரம் தொகுதியின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீட்டை தேர்தல் ஆணையம் திடீரென நிறுத்தி வைத்து விட்டதால் இடைத் தேர்தல் ஏப்ரல் மாதத்திற்குத் தள்ளிப் போகக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
பென்னாகரம் தொகுதியில் வருகிற மே மாதத்திற்குள் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது.
முதலில் ஜனவரி மாதம் 20ந் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து மறைந்த பெரியண்ணனின் மகன் இன்பசேகரன் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பாமக சார்பில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
ஆனால் பொங்கல் பண்டிகை வருவதால் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்று அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் கமிஷனுக்கு கோரிக்கை மனு அளித்தன. இதை ஏற்று இடைத்தேர்தலை தேர்தல் கமிஷன் தள்ளி வைத்தது.
இந்த நிலையில் ஜனவரி 1ந் தேதி வரை 18 வயது பூர்த்தியானவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க தேர்தல் கமிஷன் முடிவு செய்ததையடுத்து அங்கு வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டு, புதிய பெயர்களை சேர்த்தல் மற்றும் நீக்கும் பணிகள் நடந்தன.
திருத்தப்பட்ட பட்டியலை தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட இருந்தது. இந்த நிலையில், அதிமுகவின் 8 கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் டெல்லி சென்று தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் மனு அளித்தன.
அதில் பென்னாகரம் தொகுதியில் சுமார் 30 ஆயிரம் பேர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், அதே சமயம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக புகாரில் கூறப்பட்டிருந்தது.
இதனையடுத்து, பென்னாகரம் தொகுதியில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை வெளியிடுவதை நிறுத்தி வைக்குமாறு மாநில தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவுக்கு தலைமை தேர்தல் கமிஷன் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து வாக்காளர் பட்டியல் வெளியிடுவது நிறுத்தி வைக்கப்பட்டு விட்டது.
இதனால் இடைத் தேர்தல் தள்ளிப் போகக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. அனேகமாக ஏப்ரல மாதத்திற்கு இடைத் தேர்தல் தள்ளிப் போகும் என்றும் தெரிகிறது.
இதற்கிடையே, வாக்காளர் பட்டியலில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை என்று மாவட்ட ஆட்சித் தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியல் திருத்தம் தீவிர சரிபார்த்தலுக்கு பின்னரே செய்யப் பட்டதாகவும், வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க சுமார் 32 ஆயிரம் பேர் புதிதாக விண்ணப்பித் திருந்தனர் என்றும், இறந்தவர்கள், இடம் மாறியவர்கள் உள்பட பட்டியலில் இருந்து நீக்கப் பட்டவர்கள் சில நூறு பேர்கள் தான் இருப்பார்கள் என்றும், எனவே 30 ஆயிரம் பேர் நீக்கப்பட்டதாக கூறப்படுவதில் எந்த அடிப்படை உண்மையும் இல்லை என்றும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications