மல்டிமீடியா மூலம் கல்வி: அமைச்சர் பூங்கோதை வலியுறுத்தல்
மதுரை: மல்டி மீடியா தொழில்நுட்பத்தின் மூலம் மாணவர்களுக்கு கல்வி பயிற்சி அளிப்பது சிறந்த பலனைத் தரும் என தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பூங்கோதை வலியுறுத்தி உள்ளார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும், ஆசியாவிற்கான கல்வி ஊடக நிலையமும் இணைந்து மல்டி மீடியா மூலம் கற்றல் மற்றும் கற்பித்தல் தொடர்பான பன்னாட்டு முகாம் நேற்று நடைபெற்றது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பூங்கோதை, துணைவேந்தர் இரா.கற்பககுமாரவேல், ஐ.சி.டி அகடமி தலைமை செயல் அலுவலர் சிவக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
முகாமில் பல்கலைக் கழகத்துக்கும், ஐசிடி அகடமிக்கும் இடையே மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது.
முன்னதாக தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பூங்கோதை முகாமை துவக்கி வைத்து பேசுகையில், 'பிற மாநிலங்களை விட தமிழகத்தில் உயர்கல்விக்குச் செல்வோர் எண்ணிக்கை 17 சதவீதம் அதிகம்.
தொழிற்கல்வி நுழைவுத் தேர்வு ரத்தானதால் பொறியியல், மருத்துவத் துறையில் கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்பு அதிகரித்துள்ளது. கிராமங்களில் முதல் மற்றும் 2ம் தலைமுறையினர் தான் தற்போது கல்வி கற்று வருகின்றனர்.
நகரங்களில் நான்கு மற்றும் ஐந்தாவது தலைமுறையாக படிக்கின்றனர். அவர்களுக்கு கல்விக்கான பின்புலம் உள்ளது. இவர்களுடன் பிறரை ஒப்பிடக் கூடாது.
கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்தால் வளர்ச்சியடைவர். தரமான கல்வி மூலம் தான் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.
அமெரிக்காவில் மல்டிமீடியா மூலம் கற்கும் மாணவர்களிடம் ஆய்வு நடத்தியதில், அது பயனுள்ளதாக இருப்பதாக தெரியவந்துள்ளது. மல்டிமீடியாவில் தர நிர்ணய அமைப்பு ஏற்படுத்த வேண்டும்.
வீடியோ, அனிமேஷன், கிராபிக்ஸ், டெக்ஸ்ட், சவுண்டு மூலம் கற்பித்தால் எளிதில் புரியும். இது போன்று பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும்.
ஐ.சி.டி.மூலம் 5,000 பேருக்கு தகவல் தொழில்நுட்ப பயிற்சி துவங்கியுள்ளது. மேலும் 2.50 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். அரசின், இ-கவர்னன்ஸ் மூலம் வேலைவாய்ப்பு பெருகும்' என்றார்.












Click it and Unblock the Notifications