என்னை குப்பைத் தொட்டி போல பயன்படுத்தி விட்டனர் - அமர்சிங்
டெல்லி: சமாஜ்வாடிக் கட்சி என்னை குப்பைத் தொட்டி போல பயன்படுத்திக் கொண்டு விட்டது என்று குற்றம் சாட்டியுள்ளார் அமர்சிங்.
தனது தோழியான ஜெயப் பிரதாவுடன் சேர்த்து சமாஜ்வாடிக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு விட்டார் அமர்சிங். முடிந்தால் ஜெயா பச்சனையும் நீக்கிப் பாருங்கள் என்று இப்போது முலாயம் சிங் யாதவுக்கு சவால் விட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சமாஜ்வாடிக் கட்சியில் எனது பயணம் ஒரு குப்பைத் தொட்டியாக தொடங்கி தற்போது தூக்கி எறியப்பட்ட குப்பையாக மாறி முடிந்துள்ளது.
கட்சித் தலைமை எடுத்த முடிவுகள் கட்சிக்கு விரோதமாக மாறியதற்கெல்லாம் இப்போது என்னைக் குற்றம் சாட்டி வருகின்றனர். கல்யாண்சிங்குடன் கட்சிக்கு நெருக்கம் ஏற்பட்டபோது, அதுகுறித்து விமர்சனம் எழுந்ததற்கும் நான்தான் காரணம் என்கிறார்கள்.
ஆனால் கட்சியில் எடுக்கப்பட்ட அனைத்து முக்கியமான முடிவுகளும் முலாயம் சிங் யாதவும், அவருடைய தம்பி ராம் கோபால் யாதவும் சேர்ந்து எடுத்ததுதான். ஆனால் என்னைக் குற்றம் சாட்டுகிறார்கள்.
நான் சத்திரியன். தவறான முடிவுகளுக்கு என்னைப் பொறுப்பேற்கச் சொல்லியிருந்தால் கூட நான் ஏற்றிருப்பேன். ஆனால் எல்லாமே தவறாகப் போனதற்கு நான்தான் காரணம் என்று கூறுவதை ஏற்க முடியாது. என்னை நீக்க, நீக்கத்திற்கான விளக்கம் அளிக்க நடந்த சதி இது என்றார் அமர்சிங்.












Click it and Unblock the Notifications