பால் தாக்கரே மனநல சம நிலையை இழந்து விட்டார்-காங்
லக்னோ: ராகுல் காந்தியை தனிப்பட்ட முறையில் தாக்கி வருவதன் மூலம் சிவசேனா தலைவர் பால் தாக்கரே தனது மன நல சம நிலையை இழந்து விட்டார் என்று தோன்றுகிறது என உ.பி. காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது.
இதுகுறித்து உ.பி. மாநில சட்டசபை காங்கிரஸ் தலைவர் பிரமோத் திவாரி கூறுகையில், ராகுல் காந்தி மீது தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்தி வருகிறார் பால் தாக்கரே. தொடர் தேர்தல் தோல்வி, குடும்பத்திற்குள் நிலவும் பூசல் காரணமாக அவர் மன நல சம நிலையை இழந்து விட்டதாக தெரிகிறது.
சமீபத்தில் நடந்த தேர்தலில் சிவசேனாவின் தோல்வி அவரை பாதித்துள்ளது. இதனால்தான் வரம்பு மீறி பேசுகிறார். ராகுல் காந்தியை தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசிக் கொண்டிருக்கிறார். நாகரீகத்தின் எல்லைக் கோட்டை அவர் தாண்டிப் போய்க் கொண்டிருக்கிறார்.
தாக்கரே இதைத் தொடர்ந்து மேற்கொண்டால், அவரது மகனின் மர்ம மரணம் குறித்தும், அவரது வீட்டை விட்டு மருமகள் ஸ்மிதா தாக்கரே வெளியேறியது குறித்தும் நாங்கள் கேள்வி கேட்க வேண்டி வரும் என்றார் திவாரி.
விதர்பா மாநிலம் அமைய விட மாட்டோம்- உத்தவ்:
இந் நிலையி்ல் விதர்பா மாநிலம் உருவாக அனுமதிக்க மாட்டோம். அதேபோல மகாராஷ்டிராவிலிருந்து மும்பையைப் பிரிக்க நடக்கும் சூழ்ச்சியையும் அனுமதிக்க மாட்டோம் என்று சிவசேனா செயல் தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
இதுகுறித்து உத்தவ் தாக்கரே கூறுகையில், மகாராஷ்டிராவிலிருந்து விதர்பா பகுதியைப் பிரிக்க முயல்கிறார்கள். இதற்கு பாஜகவும் ஆதரவாக உள்ளது. இதை நாங்கள் எக்காரணம் கொண்டும் அனுமதிக்க மாட்டோம்.
விதர்பா குறித்து பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் முன்பே எங்களது நிலையை தெளிவாக கூறியுள்ளோம். எனவே பாஜகவின் முயற்சியும், நோக்கமும் தவறானது, ஏற்றுக் கொள்ளமுடியாதது.
அதேபோல மகாராஷ்டிராவிலிருந்து மும்பையைப் பிரிக்கவும் சிலர் சதி செய்கிறார்கள். இதையும் அனுமதிக்க மாட்டோம்.
மகாராஷ்டிராவின் எந்தப் பகுதியும் பிரிந்து போவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்றார்.












Click it and Unblock the Notifications